எப்போது தண்டனை கிடைக்கும்? மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிபா சமீபத்தில் 8 மனித மிருகங்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதேபோல், உபியிலும் பா.ஜ.க எம்.எல்.ஏ. மற்றும் அவரது சகோதரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அளித்த புகாரின்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்னர் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணின் தந்தை போலீஸ் காவலின்போது மரணமடைந்தார்.
இந்த இரண்டு கொடுமைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் பிரதமர் ஏன் மவுனமாக இருப்பதாக கேள்வி எழுப்பினார்
இதற்கிடையே, டெல்லியில் நேற்று நடந்த அம்பேத்கர் நினைவு இல்லம் திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, எந்த குற்றவாளியையும் தப்பவிட மாட்டோம், நமது மகள்களுக்கான நீதி நிச்சயமாக கிடைக்கும் என குறிப்பிட்டார்.
இந்நிலையில், கத்துவா மற்றும் உன்னாவ் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எப்போது தண்டனை கிடைக்கும் என இந்தியா எதிர்பார்த்து இருப்பதாக பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கூறுகையில், நீண்ட மவுனத்துக்கு பிறகு வாய் திறந்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி. நமது மகள்களுக்கான நீதி நிச்சயம் கிடைக்கும் என கூறியுள்ளீர்கள். அது எப்போது என்பதை இந்தியா எதிர்பார்த்து காத்திருக்கிறது. குற்றவாளிகளுக்கு எப்போது தண்டனை கிடைக்கும் என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.