தலைவலிக்குதேன்னு டாக்டர்கிட்ட போனேன்…. உடனே பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், எக்ஸ்ரே, ஸ்கேன்னு ஒரு லிஸ்ட்டைக் கொடுத்து எடுக்கச் சொல்லிட்டார். சாதாரணத் தலைவலிக்கு இத்தனை டெஸ்ட்டும் எடுக்கணுமா?’ என்று சந்தேகத்துடன் புலம்புகிறவர்கள் நம்மிடையே அதிகம்.
இதுபோல் எந்த டாக்டரிடம் போனாலும், ‘வருஷத்துக்கு ஒரு தடவையாவது தவறாமல் மாஸ்டர் ஹெல்த் செக்-அப் பண்ணிடுங்க…’ என்று ஆலோசனை சொல்வதும் வழக்கமாகிவருகிறது. எந்த நோயும் தாக்காமல், தேவையில்லாமல் எதற்குச் செலவு மிகுந்த பரிசோதனைகளைச் செய்ய வேண்டும் என்று நோயாளிகள் குழம்புவது வழக்கம்.
நோய்களின் ஆதிக்கம்
நோயாளியின் நாடியைப் பிடித்துப் பார்த்து, மருத்துவர் நோய்களைக் கண்டறிந்த காலம் ஒன்று இருந்தது. அப்போது மக்களைத் தாக்கும் நோய்களும் ஒரு வரைமுறைக்குள் இருந்தன. எனவே, ‘இந்த நோய் இப்படித்தான் வெளிப்படும்’ என்று அறிகுறிகளை வைத்துச் சரியாகத் தீர்மானிக்க முடிந்தது.
ஆனால், இப்போதோ நம்முடைய உணவு முறை மாறிவிட்டது. உடலுழைப்பு குறைந்துவிட்டது. சுற்றுச்சூழல் ரொம்பவே கெட்டுப்போயுள்ளது, சுத்தமான காற்றுக்கு இடமில்லை. மாசில்லாத குடிநீருக்கு ரொம்பவே பஞ்சம். இம்மாதிரி அசுத்தமான சூழலில் வாழும் மக்களுக்கு ‘பலாச் சுளைகளை மொய்க்கும் ஈக்களைப்போல’ வெகு எளிதில் தொற்றுநோய்கள் தொற்றிக்கொள்கின்றன. எபோலா, மெர்ஸ் போன்ற புதிய புதிய நோய்களும் அவ்வப்போது புறப்படுகின்றன. போதாக்குறைக்கு நம் வாழ்க்கைமுறை மாற்றங்களால் ஏற்படுகிற உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற தொற்றா நோய்களும் அதிகரித்துவருகின்றன.
பொறுமை காப்போம்
முன்பெல்லாம் ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருந்தார்கள். இப்போது ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு மேல் காண்பது அரிதாகிவருகிறது. இதனால், குழந்தைக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது எனப் பெற்றோர் எச்சரிக்கையாக இருக்கின்றனர். குழந்தைக்குச் சிறிய ஆரோக்கியப் பிரச்சினை என்றாலும் பதற்றமடைகின்றனர். உடனே தீர்வு காணத் துடிக்கின்றனர்.
இதனால் சாதாரணக் காய்ச்சல் வந்தால்கூட, மூன்று நாட்களுக்கு மேல் கட்டுப்படாவிட்டால், பன்றிக் காய்ச்சலாக இருக்குமா, பறவைக் காய்ச்சலாக இருக்குமா, டெங்குவா, மலேரியாவா என்று ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
மற்றொருபுறம் உடலுக்குள் என்ன நடக்கிறது, உறுப்புகளுக்குள் என்ன நடக்கிறது என்பது போன்றவற்றைத் தாண்டி, ஒவ்வொரு செல்லிலும் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு மருத்துவத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதனால், எந்த ஒரு நோயையும் தெளிவாகத் தெரிந்துகொண்டு, சிகிச்சை அளிப்பது நடைமுறையில் எளிதாகிறது. ஒரு நோயைத் துல்லியமாகக் கணிப்பதற்கு முழுமையான உடல் பரிசோதனைகள் உதவுகின்றன.
மனக் குழப்பம் வேண்டாம்
இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லிவிடுவது நல்லது. இந்தத் தொடரில் ‘இயல்பான பரிசோதனை முடிவுகள்’ (Normal values) என்று கொடுக்கப்படுபவை பொதுவானவை. பரிசோதிக்கும் ‘லேப்’களைப் பொறுத்து இயல்பான முடிவுகளிலும் அசாதாரணமான முடிவுகளிலும் சிறிதளவு மாற்றம் இருக்கத்தான் செய்யும்.
பரிசோதிக்கப் பயன்படும் கருவி வசதிகள், பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் செயல்முறை, தரக்கட்டுப்பாடு போன்ற பல அடிப்படைக் கூறுகளை வைத்தே முடிவுகள் அமையும். இதனால்தான் ஒவ்வொரு லேபிலும் பரிசோதனை முடிவுகளைத் தரும்போது, அங்கு செய்யப்பட்ட பரிசோதனைகளின் இயல்பான அளவுகளையும் கொடுப்பார்கள். அப்படியும் சந்தேகம் வந்தால், சிகிச்சை பெறும் மருத்துவரிடம் விளக்கம் கேட்டுக்கொள்வதே நல்லது. வீணாக மனதைக் குழப்பிக்கொள்ள அவசியமில்லை.
மருத்துவக் கருத்துகளைப் பொறுத்த அளவில் ‘புதியன புகுதலும் பழையன கழிதலும்’ இயல்பு. உங்களுடைய பழைய பரிசோதனை முடிவுகளையும் இப்போதையை பரிசோதனை முடிவுகளையும் சிகிச்சை தரும் மருத்துவர் ஒப்பிட்டுப் பார்ப்பதில் தவறில்லை, நோயால் பாதிக்கப்பட்டவர் எனும் நிலைமையில் நீங்களாக இன்றைய பரிசோதனை முடிவுகளையும் பழைய பரிசோதனை முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்.
காரணம், அப்போதைய இயல்பு அளவுகளுக்கும் இப்போது சொல்லப்படும் இயல்பு அளவுகளுக்கும் சிறிதளவு வேறுபாடு இருக்கலாம். இம்மாதிரியான வேளைகளில் உங்களுக்குச் சந்தேகம் வரலாம். தேவையில்லாமல் குழப்பம் ஏற்படலாம். ஆனால், இவற்றை நினைத்து உடனடியாகப் பதற்றமடையத் தேவையில்லை.