கொல்கத்தாவில் இன்ஸ்டாகிராம் நடத்தும் முதல் புகைப்பட கண்காட்சி.
ஃபேஸ்புக், டுவிட்டரை அடுத்து சமூக வலைத்தளங்களில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கும் இன்ஸ்டாகிராம் தனது வாடிக்கையாளர்களின் எண்ணங்களை பல்லாயிரக்கணக்கானவர்களிடம் கொண்டு சேர்க்கும் அதிவேக தந்தி சேவையாக விளங்கிவருகிறது. இந்நிலையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நண்பர்களுக்கு காட்சிப்படுத்தும் நவீன வலைத்தளமாகவும் ‘இன்ஸ்டாகிராம்’ விளங்கி வருகின்றது. சமீபத்தில் இந்த நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராம் மூலம் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் முதல் இந்தியாவில் இருக்கும் நடிகர் – நடிகையர் வரை தங்களது விதவிதமான புகைப்படங்களை பரிமாறி வருகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பரிமாறப்பட்ட மிகச்சிறந்த புகைப்படங்களை காட்சிப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த புகைப்பட கண்காட்சி இந்தியாவில் முதல்கட்டமாக கொல்கத்தா நகரில் நடத்தப்படவுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள அழகான இடங்கள், மக்களின் கலாசாரம், உணவுப் பழக்கங்கள் மற்றும் கலை தொடர்பாக இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கும் பலர் பரிமாறிக் கொண்ட புகைப்படங்கள் இடம்பெறுகின்றன.