இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள வீட்டுக்கு காப்பீடு செய்வது அவசியம்’
இயற்கை இடர்பாடுகளிலிருந்து காத்துக் கொள்ள வீட்டை காப்பீடு செய்து கொள்வது அவசியம் என்று எச்டிஎப்சி எர்கோ பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான ரிதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:
ஒவ்வொரு தனிநபருக்கும் வீடு என்பது அதிக மதிப்புடைய சொத்து. அந்த சொத்து இயற்கை இடர்பாடுகளால் பாதிப்படையும்போது தாங்கமுடியாத நிதி இழப்பு ஏற்படுகிறது.
இதனை ஈடு செய்ய ஒவ்வொருவரும் வீட்டைக் காப்பீடு செய்திருப்பது அவசியம். இதனால், வீடுகளுக்கு மட்டுமின்றி, வீட்டிலுள்ள பொருள்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். இந்தியாவைப் பொருத்தவரையில், முன்பு வீட்டுக் காப்பீடு தேவையற்ற செலவு என கருதப்பட்டு வந்தது. ஆனால், தற்போது, இயற்கை இடர்பாடுகளால் வீடுகள், உடமைகள் சேதமடையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதையடுத்து, வீட்டுக் காப்பீட்டின் அவசியம் குறித்து அனைவரும் உணரத் தொடங்கியுள்ளனர்.
ஒருங்கிணைந்த வீட்டுக் காப்பீட்டு திட்டங்கள் கட்டடங்களுக்கு மட்டுமின்றி அதில் இருக்கும் மதிப்புமிக்க பொருள்களுக்கும் பாதுகாப்பை வழங்குவதாக உள்ளது.
சொத்தின் தன்மை மற்றும் அவற்றின் வயது ஆகியவற்றைக் கொண்டே காப்பீட்டின் அளவு தீர்மானிக்கப்படுகிறது.
காப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்வதில் வீட்டை மறுகட்டுமானம் செய்யும் செலவு முக்கிய பங்கு வகிக்கும்.
கிராமம் அல்லது நகரம் என எங்கு வசித்தாலும் வீட்டுக் காப்பீடு என்பது தற்போது அனைவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி வருகிறது என்று ரிதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கூட்டு நிறுவனமான எச்டிஎப்சி எர்கோவில், எச்டிஎப்சி 74 சதவீத பங்கு மூலதனத்தையும், ஜெர்மனியின் எர்கோ 26 சதவீத பங்கு மூலதனத்தையும் கொண்டுள்ளன.