இன்று உலக மகளிர் தின விழா. தலைவர்கள் வாழ்த்து.

இன்று உலக மகளிர் தின விழா. தலைவர்கள் வாழ்த்து.

int-womens-day

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா: “பெண்மை வாழ்க! என்று நன்றிப் பெருக்குடன் உலகம் மகளிரை வாழ்த்தி வணங்கும் சிறப்புக்குரிய நாள் மார்ச் திங்கள் 8-ம் நாள். கடந்த ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக உலகப் பெண்கள் அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை என்று வாழ்வில் அனைத்து களங்களிலும் பெற்று வரும் மகத்தான வெற்றிகளை நினைவுபடுத்தவும், பெண்கள் வெற்றி கொள்ள வேண்டிய களங்களும், சவால்களும் இன்னும் ஏராளமாகக் காத்திருக்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ளவும் இந்நாள் மகளிர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

பெண் இனம் அடைந்திருக்கும் வெற்றிகள் அனைத்திற்கும் என் பாராட்டுக்கள். அடையப் போகும் வெற்றிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணை. பெண் எப்பொழுதும் வெற்றியின் வடிவம். பெண் தியாகத்தின் ஊற்று. பெண்மை இன்றி அமையாது உலகு.

பெண்கள் தங்கள் முழு ஆற்றலோடும், உற்சாகத்தோடும் உழைத்து, இன்னும் எண்ணற்ற வெற்றிகளை பெண் இனம் பெற வேண்டும் என்று மிகுந்த ஆவலோடு என்னுடைய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அது போலவே, உழைக்கும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவியருக்கு இனிப்பும், பூங்கொத்தும் வழங்குகின்ற நிகழ்ச்சியிலும் மகளிர் அணியினர் பெருந்திரளாகக் கலந்து கொண்டு பெண்மையை வாழ்த்திடுங்கள். பெண்மை உயர உலகு உயரும். அனைவருக்கும் எனது மகளிர் தின நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்து மகிழ்கிறேன்”.

திமுக தலைவர் கருணாநிதி: “ஆண்களுக்கு இணையான சமத்துவம் நிலவச் செய்திட உலக மகளிர் நாளில் உறுதியேற்போம் !

19ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய நாடுகளிலும், பின்னர் அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் ஆயிரக்கணக்கில் மகளிர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டு மணிநேர வேலை, வாக்களிக்கும் உரிமை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடினர். அப்போராட்டங்களின் ஒருகட்டத்தில் பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் என்னும் மன்னன் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் இடம்பெறச் செய்யவும், பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848ஆம் ஆண்டின் மார் 8ஆம் நாள்! பின்னர் அந்நாளே, ‘உலக மகளிர் நாள்’ என ஆண்டுதோறும் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த திட்டங்கள் உருவெடுக்கத் தொடங்கின.

தமிழகத்தில் 1967ஆம் ஆண்டிலும், அதன் பின்னரும் அமைந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு, மகளிர் சமுதாய மேன்மைக்கு மகத்தான பல சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியது. அதன் விளைவாகத்தான் இன்று எங்கும் – எல்லா அலுவலகங்களிலும், எல்லாத் துறைகளிலும், எல்லாக் கலைகளிலும் பெண்கள் பங்குபெற்றுப் பயனடைந்து முன்னேற்றம் கண்டு சாதனைகள் பல படைத்துப் பெருமைகளைக் குவித்து வருகிறார்கள் என்பதனை எவராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

ஆனால், 2011க்குப் பிறகு, எங்கு நோக்கினும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி, பெண்கள் பாதுகாப்பின்றிப் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதனை இவ்வேளையில் வேதனையுடன் நினைவுகூரும் நிலை தமிழகத்தில் நிலவுகிறது. மனித குலத்தின் மகத்தான சக்திகளில் ஒன்றாகத் திகழும் மகளிருக்கு எதிரான இத்தகைய கொடுமைகள் முற்றிலும் அகற்றப்பட – கழக அரசு காலத்தில் தொடங்கப்பட்ட பெண்கள் நலத் திட்டங்கள் தங்கு தடையின்றித் தொடர்ந்திட – எங்கும் எதிலும் ஆண்களுக்கு இணையான சமத்துவம் நிலவச் செய்திட உலக மகளிர் நாளில் உறுதியேற்போம். தமிழக மகளிர் அனைவர்க்கும் ‘உலக மகளிர் நாள்’ நல்வாழ்த்துகளை உரித்தாக்குவோம்”.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ: ”மனிதகுலத்தின் உயர்வுக்கும், பெருமைக்கும் கருவறையாகத் திகழ்வது பெண்ணினம்தான். பெண்மையை, தாய்மையைத் தமிழர்கள் சங்க காலத்தில் போற்றி வாழ்ந்ததால்தான் அரசர்களுக்கே அறம் உரைக்கும் துணிச்சலோடு கவிதைகள் புனையும் பெண்பாற் புலவர்களும் வாழ்ந்தனர். ஆனால் உலக வரலாற்றின் நெடுகிலும் பெண்கள் ஆணாதிக்கத்தால் அடிமைப்படுத்தப்பட்டு, துன்பங்களைத் தாங்கியே வாழ்ந்து வந்துள்ளனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்துதான் அமெரிக்காவிலும், ஐரோப்பா கண்டத்திலும் பெண்கள் உரிமைப்போர் தொடுத்தனர். அரசியலில், சமூக இயலில் தொடர்ந்து போராடியே உரிமைகளைப் பெற்றனர். அரசுகளை இயக்கும் தலைமைப் பீடங்களையும் அலங்கரித்தனர். ஆனால், உரிமைகளுக்காகப் போராடிய பெண்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள அவலம் மிக மிகக் கொடூரமானது. அவர்களின் உயிருக்கும், கற்புக்கும், மானத்துக்கும், கண்ணியத்துக்கும் பேராபத்து சூழ்ந்துள்ளது.

தமிழகத்தில் மகளிருக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல், கற்பழிப்பு, உயிர்க்கொலை ஆகிய அனைத்துக் கொடுமைகளுக்கும் மது அரக்கனே முழு முதல் காரணமாகத் திகழ்கிறது. சமுதாயத்தின் அனைத்து அங்கங்களையும் சீரழிக்கும் மதுக் கொடுமையை அகற்றாமல் மகளிர் உரிமை, மகளிர் மாண்பு பற்றி முழங்குவது வெறும் ஏமாற்று வேலை ஆகும்.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு, என்றைக்கு மதுக்கொடுமை அகற்றப்படுகிறதோ, அந்த நாள்தான் மகளிர் திருநாளாக உண்மையில் மலரும்.

தமிழ் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தாய்மார்களும், சகோதரிகளும் நடுங்க வைக்கும் பாலியல் வன்முறைக்கும், கற்பழிப்புக் கொலைக்கும் ஆளானார்களே! அதனை நடத்திய கொடியோரைக் குற்றக் கூண்டில் நிறுத்தி தண்டிப்பதற்கு அனைத்துலக மகளிர் சமுதாயம் உலக மகளிர் நாளில் சூளுரை மேற்கொள்ள வேண்டும்”.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: ”பெண்கள் நாட்டின் கண்கள் என போற்றப்படும் பெருமைக்குரியவர்கள். ஆணுக்கு பெண் அடிமை என்ற அடக்குமுறைகளை உடைத்தெரிந்து ஆண்களுக்கு சரிசமமாக எல்லாத்துறைகளிலும் பெண்களாலும் சாதிக்க முடியும் என்ற சாதனைகளை பெண்கள் செய்துவருகின்றனர். ஒரு மனிதன் வாழ்வில் சரிபாதி அங்கமாக பெண்கள் திகழ்கிறார்கள். குறிப்பாக தாயாகவும், மனைவியாகவும், சகோதரிகளாகவும் இருந்து தொண்டுள்ளத்திற்கும், தியாகத்திற்கும் இலக்கணமாக இருந்து, தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து கொள்கிறார்கள். மனித இனம் தொடர்வதற்கு பெண்களே காரணமாக உள்ளனர்.

இவ்வளவு சிறப்புகளை பெற்ற பெண்களின் நலனை போற்றும் வகையில் கொண்டாடப்படுவதே உலக மகளிர் தினமாகும். சிறப்பு வாய்ந்த இந்த நன்நாளில் பெண்கள் அனைவருக்கும் எனது இதயமார்ந்த உலக மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33% சதவிகித இடஒதுக்கீடு எனும் லட்சிய கனவு இன்னும் நிறைவேறாமலேயே இருக்கிறது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது.

பெண்கள் பட்டப் பகலிலே சுதந்திரமாக நடமாட முடியாமல், செயின் பறிப்பு, ஈவ் டீசிங், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்படுவது என அவர்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவருகின்றன. இதற்கு அடிப்படையாக இருக்கக் கூடிய மதுவை ஒழிக்கவேண்டும் எனபதில் அனைத்து தாய்மார்களும் உறுதியாக உள்ளனர். வருகின்ற காலங்களில் பெண்களின் லட்சியங்கள் நிறைவேறினால் தான் சமஅந்தஸ்து, சமவாய்ப்பு, சமநீதி அவர்களுக்கு கிடைக்கும். அதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் தான் இந்த உயர்ந்த லட்சியத்தை அடையமுடியும்.

ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் அடிமை இல்லை. இருபாலரும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதே திருவள்ளுவர் காட்டிய வழியாகும். அதன் வழியில் பெண்கள் சமுதாயம் வளர்ச்சி பெற சமூகம், அரசியல், பொருளாதாரம் என அனைத்திலும் முழுபங்கு பெற வேண்டுமெனவும், பெண்கள் அனைத்து நலனும், எல்லா வளமும் பெற்று வாழ வேண்டுமெனவும், தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்”.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: ”மகளிர் உரிமைகளுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் சிந்திக்க வேண்டிய, செயல்பட வேண்டிய நாளாக உலக மகளிர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டைப் பொறுத்தவரை மக்கள் தொகையில் ஏறத்தாழ பெண்கள் 50 சதவீதமாக இருந்தாலும், ஆட்சியிலும், அதிகாரத்திலும் 33 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்கு கடந்த காலத்தில் கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது.

சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. தற்போது பெண்களின் பாதுகாப்பு அதிகமாக பேசப்பட்டாலும் தொடர்ந்து வன்முறைகள் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றன. அதை முற்றிலும் தடுப்பதற்கு உலக மகளிர் தின விழாவில் சூளுரை மேற்கொள்வதன் மூலமாக பெண்களின் பாதுகாப்பையும், எதிர்காலத்தையும் உறுதி செய்ய முடியும். உலக மகளிர் தின விழாவில் அனைத்து பெண் சமுதாயத்தினருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”.

Leave a Reply