# சாம்சங்கின் டைசன் ஓஎஸ் ஸ்மார்ட் ஃபோன் பற்றித் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் இந்தப் புதிய போன் இம்மாத இறுதியில் இந்தியச் சந்தையில் அறிமுகமாகலாம் எனக் கூறப்படுகிறது. 100 டாலருக்குக் கீழ் அதாவது 6,000 ரூபாய்க்குக் குறைந்த விலைப் பிரிவில் இது அறிமுகமாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஃபோன் இசட் 1 என்று அழைக்கப்பட இருப்பதாகவும் தென்கொரிய நாளிதழ் ஒன்று தெரிவிக்கிறது.
# ஸ்மார்ட் ஃபோன் தயாரிப்பு நிறுவனமான எச்டிசி தனது புதிய ஸ்மார்ட் ஃபோனை அடுத்த ஆண்டு பார்சிலோனா தொழில்நுட்பக் கண்காட்சியில் அறிமுகம் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் பிரபலமான எச்டிசி ஒன் எம் 8 ஃபோனின் அடுத்த வடிவமாக இது இருக்கும் என்றும் மைடிரைவர்ஸ் இணையதளம் தெரிவிக்கிறது.
# சீன மின்னணுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான மெய்சு (Meizu- உபுண்டு லினஸ்க் பின்னே உள்ள நிறுவனம்) புதிய கூட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி இதன் புதிய பிலேம் ஓஎஸ் அடிப்படையிலான ஸ்மார்ட் ஃபோன் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சீன மற்றும் ஐரோப்பியச் சந்தைகளில் அறிமுகமாகலாம் என்று சொல்லப்படுகிறது. உபுண்டு டச் அடிப்படையிலானது என்பதால் செயலிகள் டெஸ்க்டாப் மற்றும் ஸ்மார்ட் போன் இரண்டிலும் செயல்படக்கூடியதாக இருக்கும்..