தஞ்சை மாவட்டத்திலுள்ள கடற்கரை நகரமான அதிராம்பட்டினம், அதிகாலையிலேயே தொழுகைக்கு அழைக்கும் பாங்கொலியால் விழிக்கும் ஊராகும். ஏமன் நாட்டின் ஹள்ரமவ்த் பகுதியிலிருந்து வந்த அரபுகள் தங்களை ஹள்ரமீ எனக் கூறிக்கொண்டனர். அதுவே நாளடைவில் அதிரமீபட்டினம், அதிராம்பட்டினம் எனப் பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அரபுகளின் பயணக் குறிப்புகளில் இவ்வூர் அபதான், அபதான் பத்தன், அபாத்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குதான் ஷைகு அலாவுதீனுக்கு தர்கா அமைந்துள்ளது.
மகான் வளர்த்த அழகிய குதிரை
காஜா ஷைகு அலாவுதீன் காபூலுக்கு வடமேற்கேயுள்ள பல்கு நாட்டில் ஹிஜ்ரி பத்தாம் நுாற்றாண்டில் பிறந்தவர். இளம் வயதிலேயே இரண்டு சன்மார்க்க குருமார்களின் சீடராகத் தங்கிக் கல்வியும் ஆன்மிக ஞானமும் பெற்றார்.
இலங்கையிலும் இந்தியாவிலும் சஞ்சாரம் செய்து சன்மார்க்க நெறிமுறைகளைப் பரப்பிய ஷைகு அலாவுதீன் அவர்களின் வாழ்க்கை அற்புதங்கள் நிறைந்தது. இலங்கையில் கடமைகளை முடித்துவிட்டு அதிராம்பட்டினத்திற்கு வந்தார் அருகிலுள்ள மகலம் என்ற இடத்தில் சீடர்களுடன் 15 ஆண்டுகள் தங்கி பல அற்புதங்களை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.
ஷைகு அலாவூதீன் அவர்கள் ஒரு அழகிய குதிரையை வளர்த்துப் பராமரித்துவந்தாராம். எப்படியாவது அந்தக் குதிரையை அடைந்துவிட வேண்டுமென்று முயன்ற பணக்காரர் ஒருவர், நள்ளிரவில் மூன்று வேலைக்காரர்களை அனுப்பி குதிரையை இழுத்துவரும்படிச் சொன்னாராம். நள்ளிரவில்அந்நியர்களைக் கண்ட குதிரை வேகமாகச் சத்தம் எழுப்பியது. ஞானி வெளியே வந்து பார்த்தாராம்.
‘நீங்கள் அப்படியே நில்லுங்கள்’ என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார் ஷைகு அலாவுதீன். மறுநாள் காலை வரை மூன்று பேரும் அசைய முடியாமல் நின்றார்கள். விடிந்ததும் விசாரித்து விவரம் அறிந்தவர், குதிரையை அவர்களின் முதலாளியிடம் ஓட்டிப்போகச் சொன்னார். குதிரையைப் பார்த்த மகிழ்ச்சியில் அதன்மீது சவாரி செய்ய உட்கார்ந்த பணக்காரர், உடல்பலம் இழந்து, கை கால் முடமாகிக் கீழே விழுந்துவிட்டார். விழுந்தவர், மகானின் மன்னிப்பைக் கோரி அவர் ஓதித்தந்த தண்ணீரை அருந்திய பின்னரே குணமடைந்தாராம்.
ஷைகு அலாவுதீனின் அற்புதங்கள்
ஷைகு அலாவுதீன் அவர்கள் தண்ணீர் ஓதிக்கொடுத்து பலருடைய நோய்களைக் குணப்படுத்தினார். தொழுநோயாளியாக இருந்த ஒருவர் குணமடைந்ததும் தனது காணிக்கையாக ஒரு பூந்தோட்டத்தை அவர் தங்குவதற்குத் தந்தார். அங்குள்ள ஒரு குளம் மகான் அவர்களால் ஊற்றுக்கண் உண்டாக்கப்பட்ட இடமாகும். சுற்றுவட்டாரங்களில் அவருடைய செல்வாக்கு பரவியதால், அன்றாடம் மக்கள் அவரை நாடிவந்து குறைகளைச் சொல்லி குணமடைந்து சென்றனர்.
பிறகு ஷைகு அலாவுதீன், தனது தந்தையின் ஊரான பாலாப்பூருக்குச் சென்றார். பாலாப்பூர், அதிராம்பட்டினம், கீழக்கரை, மதுரை, ஈரோடு, ஏர்வாடி பலவத்துறை, வலித்துறை, பள்ளிவாசல்துறை, கலித்துறை, பாப்பாவூர் ஆகிய பதினொரு இடங்களில் ஷைகு அலாவுதீனின் நினைவிடங்கள் உள்ளன.
வாடிய புளியமரம்
அதிராம்பட்டினத்தின் கடற்கரைத் தெருவிலுள்ள தர்காவின் நுழைவாயிலில் கட்டப்பட்டிருந்த செப்பேடு பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஒரு பக்கத்தில் மட்டும் 30 வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன. தர்காவுக்காக அதிராம்பட்டினம் கிராமத்தையும், அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் தஞ்சை செவ்வப்ப நாயக்கர் சர்வ மானியமாக அளித்தார் என்று அதில் வரையப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் சாகிபு அவர்களின் கந்துாரி விழாவை தர்கா நிர்வாகிகள் நடத்தவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
மகான் ஷைகு அலாவுதீன் முதலில் அதிராம்பட்டினத்தில் சமயப் பணிகளை நிறைவேற்றிவிட்டு, பிற்காலத்தில் வெளியூர்களுக்குச் சென்றுவிட்டார். தமக்கு அந்திமக் காலம் வந்து உயிர் துறந்தால், தான் வளர்த்துவந்த புளியமரம் வாடி வதங்கிவிடும் என்றும், தமது உடலை அந்த இடத்திற்கே கொண்டுவந்து அடக்கம் செய்யவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்.
அதன்படி பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் புளியமரம் வாடியது. அதனால் மகான் மரணமடைந்து விட்டதை உணர்ந்த சீடர்கள் அதிர்ச்சியடைந்து உடலைத் தேடி மீட்கும் கடமையில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலத்திலுள்ள படே பாலாப்பூரில் அடக்கம் செய்யப் பட்டிருந்த தகவல் கேட்டுத் தொண்டர்கள் அங்குசென்றனர். அவர்களின் முயற்சியை தொடக்கத்தில் எதிர்த்த உள்ளூர்வாசிகள் பிறகு சம்மதித்தனர்.
சமாதி கண்ட அரசர்
ஷைகு அலாவுதீன் அவர்களின் உடலை தஞ்சாவூர் வழியாக அதிராம்பட்டினத்திற்குக் கொண்டுவரும் வழியில் ஒரு சோதனை. உயிரற்ற உடலை எடுத்துச் செல்வதை அனுமதிக்க முடியாது என்று அரண்மனைப் பணியாளர்கள் மறுத்தனர். அதனால் அரசரிடம் விவகாரம் கொண்டுசெல்லப்பட்டது. அரசர் செவ்வப்ப நாயக்கனே நேரில் வந்து சோதித்தாராம். ஷைகு அலாவுதீன் அவர்களின் ஞான மகிமையை உணர்ந்த அரசர் ஷைகு அலாவுதீனின் உடலை வணங்கி, சீடர்களுடன் சேர்ந்து மகானின் நல்லுடலை அதிராம்பட்டினத்திற்குக் கொண்டுவந்தார் அரசர். அவருக்காக ஒரு தர்காவைக் கட்டியதுடன், அந்த இடத்திற்கு அருகே பெரிய குளம் ஒன்றையும் வெட்டிக் கொடுத்தார்.
இறைநேசர் ஷைகு அலாவுதீன் அவர்களின் நினைவைப் போற்றும்வகையில், அதிராம்பட்டினம், பாப்பாவூர் உள்ளிட்ட எல்லா பேரூர்களிலும் ஆண்டுதோறும் முஹர்ரம் மாதம் பிறை 11-ல் கொடி ஏற்றப்பட்டு கந்துாரி விழா நடைபெறுகிறது.