இறைவன் வகுத்த விதியை மனிதனால் வெல்ல முடியுமா?

sundaraMahalingam

இந்த பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அந்த இயக்கங்களுக்கு விளைவுகளும் இருக்கின்றது. இது ஒரு விதி. அது போல மனிதர்களான நமக்கும் சில இயற்கை ஒழுங்குகள் உண்டு. அந்த ஒழுங்கின் படி நடப்பதாலோ அல்லது அதை மீறி செயல்படுவதாலோ ஏற்படும் விளைவுகள் நம் வாழ்விலோ அல்லது நம்மைச் சார்ந்தவர் வாழ்விலோ சூழ்நிலைகளாக பரிணமிக்கின்றது. இத்தகைய சூழ்நிலைகள் நம் வாழ்வின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கின்றன. இதையே விதி அல்லது காரணம் என்கிறார்கள். காரணமின்றி காரியமில்லை என்று சொல்வது இதைத்தான். இந்த பிறப்பு நமக்கு வாய்த்திருக்கிறது என்றால் அதற்கொரு காரணம் இருக்கத்தானே வேண்டும் ? முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் விளைவாக இப்பிறவி அமைகிறது என்பது ஒரு கருத்து. அவ்வாறல்ல மறு பிறவியெல்லாம் கிடையாது. மரபு அணுக்கள் வாயிலாக நம் முன்னோர்களின் வினைப் பதிவுகளைச் சுமந்து கொண்டு நாம் பிறக்கிறோம் என்பது மற்றொரு கருத்து. ஆக வினைகள் என்கிற காரணத்தின் விளைவுகளே விதி என்பது புலப்படுகிறது. இந்த விதி என்கிற கோட்பாட்டை தவறாகப் புரிந்து கொளபவர்கள் வீணர்களே. அதில் சந்தேகமே இல்லை. சென்ற பிறவியில் நாமோ அல்லது முன்னோர்கள் செய்த வினைகளோ நமக்கு இந்த பிறவிக்கு விதியாக, காரணமாக இருக்கின்றது என்றால், இந்த பிறவியில் நாம் அந்த பழைய வினைகளை புதிய வினைகளின் மூலம் மாற்ற முடியும்தானே ?

உதாரணமாக நெருப்பு சுடும் என்பது விதி. எனவே நம் அறிவின் திறத்தால் அந்த நெருப்பு நம்மை சுடாத வண்ணம் அதை பயன்படுத்திக் கொள்வதில்லையா ? குளிரடித்தால் உடல் விறைக்கும் என்பது விதி. அந்தக் குளிரைத் தாங்கும் வண்ணம் கம்பிளி ஆடைகளை உடுத்திக் கொள்வதில்லையா ? அது போலவே ஒருவன் பணக்காரனாகவோ, ஏழையாகவோ பிறப்பதற்கு விதி காரணமாக இருக்கலாம் ஆனால், இந்தப் பிறவியை வெற்றியாகவோ, தோல்வியாகவோ ஆக்கிக் கொள்வது மதியைப் பொருத்த விஷயமே. சீட்டு விளையாடும் பொழுது எந்த சீட்டு விழுகின்றது என்பது விதியாக இருக்கலாம். விழுந்த சீட்டை வைத்து ஒருவன் எப்படி விளையாடுகிறான் என்பது மதியைப் பொருத்த விஷயம்தானே. நல்ல சீட்டு விழுந்தவன் மோசமாக விளையாடித் தோற்றுப் போவதும், மோசமான சீட்டுகளைப் பெற்றவன் திறமையாக விளையாடி ஜெயிப்பதும் மதி சார்ந்த விஷயம்தானே ? எனவே நாம் பிறக்கின்ற சூழ்நிலை விதியால் வந்தது என்றாலும், நம் வாழ்க்கையை வெற்றிகரமாக ஆக்குவது என்பது நம் மதியின் கைகளில்தான் இருக்கிறது.

ஒரு பிறப்பிற்கு காரணமாக இருக்கும் விதியை தீர்மானிப்பது நம் முற்பிறவி செயலோ அல்லது முன்னோர்கள் செயலாகவோ இருக்கின்றது என்கிற பொழுது, இந்த பிறவியின் பாவ புண்ணியங்களுக்கு நம் செயல்களைதானே காரணமாக இருக்கும். நமது எண்ணங்களே அத்தகைய செயல்களாக மலர்கின்றன. எனவே நம் எண்ணங்களைத் தூய்மையாக வைத்துக் கொண்டால் செயல்களும் தூய்மையாகவே அமையும். விளைவுகளும் நன்மையாக இருக்கும். மாறாக விதி விதி என்று புலம்பிக் கொண்டிருப்பவர்களை வீணர்கள் என்று சொல்வதில் எந்தத் தவறுமில்லை. விதி என்கிற கோட்பாட்டை தவறாகப் புரிந்து கொள்கிறவன் தன்னுடைய முயற்சியை கைவிட்டு விடுகிறான். மேலும் சோம்பலுக்கும் பல தீய குணங்களுக்கும் ஆளாகி விடுகிறான். விதி என்பது இயற்கையின் சட்டம். அதை மனிதன் மதியால் வெல்ல வேண்டும் என்பதே இறைவனின் திட்டம்.

Leave a Reply