ஈரான் நாடாளுமன்ற தேர்தல். முடிவுக்கு வருகிறது பழமைவாத கூட்டணி
ஈரான் நாடாளுமன்ற தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முதல் எண்ணப்பட்டன. கடைசியாக வந்த தகவலின்படி ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானிக்கு ஆதரவான சீர்திருத்த மற்றும் மிதவாதத் தலைவர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று வருவதாகவும், கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் ஈரான் நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த பழமை மற்றும் மதவாதிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் நாட்டின் மீது வல்லரசு நாடுகள் நீண்ட காலமாக பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பொருளாதாரத் தடைகளை நீக்க வகை செய்யும் அணுசக்தி ஒப்பந்தத்தை ரெளஹானி ஈடுபட்டார். இதனால் அவருக்கு மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அந்த ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இந்தத் தேர்தலில், 17 பெண்கள் எம்.பி.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஈரானில் இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்ட பின்னர் அதிக அளவில் பெண் எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
ஈரானின் அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்றத்தின் முடிவுகளை மறுக்கும் அதிகாரம், அந்த நாட்டின் மதகுருக்களின் அவைக்கு உள்ளது. எனினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெறுவதன் மூலம், மிதவாதத் தலைவர்களால் நாட்டில் பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
மொத்தக் 290 இடங்களைக் கொண்ட ஈரான் நாடாளுமன்றத்தில் மிதவாதக் கூட்டணிக்கு 131 இடங்களும், பழமைவாதக் கூட்டணிக்கு 124 இடங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற மிதவாதக் கூட்டணிக்கு இன்னும் 15 இடங்கள் தேவைப்படும் நிலையில், சுயேச்சை எம்.பி.க்கள் மிதவாத கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.