இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு: திரைவிமர்சனம்
சீனப்பட்டாசு
பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கயல் ஆனந்தி, ரித்விகா நடிப்பில் உருவாகியுள்ள ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
இரண்டாம் உலகப்போரின் போது எதிரி நாடுகள் மீது போட்ட பல குண்டுகள் வெடிக்கபடாமல் இருந்த நிலையில் அந்த குண்டுகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டது. இந்த குண்டுகள் கடல் சீற்றத்தின் காரணமாக கரை ஒதுங்கி, எதிர்பாராமல் வெடித்து பல உயிர்கள் பலியாவது அவ்வப்போது நடந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் அப்படி ஒரு அணுகுண்டு மாமல்லபுரம் கடற்கரையில் ஒதுங்கிய உறங்கிய நிலையில் அந்த அணுகுண்டால் ஏற்படும் விபரீதங்கள் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை
கடற்கரையில் ஒதுங்கிய குண்டின் தீவிரத்தை உணர்ந்த ஜெர்மன் பெண் ஒருவர் அதனை போலீசாரிடம் தகவல் தெரிவிக்கின்றார். போலீசார் அதனை மீட்டு காவல் நிலையத்தில் வைத்து இருந்த போது அணு ஆயுத வியாபாரி ஒருவர் அந்த குண்டு வெடித்தால் தனது வியாபாரம் பாதிக்கும் என்பதால் அதனை தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறுகிறார். இந்த நிலையில் திடீரென குண்டு காணாமல் போகிறது அந்த குண்டு என்ன ஆனது என்பதை தேடி கண்டுபிடிக்க போலீசார் ஒருபுறமும், ரித்விகா தலைமையில் பத்திரிகையாளர் கூட்டம் ஒருபுறமும் வில்லன் கூட்டம் ஒரு புறமும் தேடிக்கொண்டிருக்க அது தினேஷ் கையில் சிக்குகிறது. அதன் பின் என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை
லாரி டிரைவர் கேரக்டரில் தினேஷ் சுறுசுறுப்பாக நடித்து உள்ளார். துருதுருவென இருக்கும் அவரது நடிப்பை பார்த்து கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது. கயல் ஆனந்தி உடன் அவர் கொள்ளும் காதல், சரக்கைப் போட்டு விட்டு பழைய இரும்புக்கடையில் செய்யும் சேட்டை, முனீஸ்காந்த் இடம் செய்யும் காமெடி, தன்னுடைய லாரியில் உள்ளது குண்டு என தெரிந்து அதன் விபரீதம் அறிந்ததும் அதனால் ஏற்படும் பதட்டம் ஆகியவற்றை தனது நடிப்பின் மூலம் அழகாக வெளிப்படுத்தியுள்ளார் தினேஷ்
கயல் ஆனந்திக்கு வழக்கமான நாயகி வேடம் என்றாலும் ஒரு சில காட்சிகளில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை அவர் சரியாக பயன்படுத்தி உள்ளார் என்று சொல்லலாம். ரித்விகா நடிப்பு பாராட்டும்படி உள்ளது. அணுகுண்டை தேடி அவர் எடுக்கும் முயற்சிகள் குழந்தை தனமாக இருந்தாலும் அணுகுண்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் ஒருவர் தான் என்பதை அவர் சொல்லும் காட்சியில் அவரது நடிப்பு அபாரம்
முனீஸ்காந்த் ஜான் விஜய் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அவர்களது கேரக்டர்கள் சரியாக வடிவமைக்கப்படாததால் மனதில் நிற்க மறுக்கிறது
இசையமைப்பாளர் தேவாவின் பின்னணி இசை அருமையாக இருந்தாலும் பாடல்கள் சம்பந்தமில்லாத இடத்தில் வருவதால் ரசிக்க முடியவில்லை
இயக்குனர் அதியன் ஆதிரை குண்டின் விபரீத பற்றி சொல்ல வந்த கதையை, அவர் மெயின் கதையாக சொல்லாமல் இடையிடையே ரொமான்ஸ் மற்றும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு கமர்சியல் படமாக்கியுள்ளார். முழுக்க முழுக்க குண்டின் விபரீதத்தை அவர் திரைக்கதையில் அழுத்தமாக அமைத்திருந்தால் இந்த படம் உண்மையாகவே ஒரு அணுகுண்டு ஆக மாறியிருக்கும். திரைக்கதையை அவ்வப்போது திசைமாறி சென்றதால் இது சீன பட்டாசாக மட்டுமே உள்ளது
2/5