ஈராக் நாட்டில் இருந்து தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த 46 இந்திய செவிலியர்கள் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்திற்கு இன்று நண்பகல் பத்திரமாக வந்து சேர்ந்தனர். அங்கிருந்து அவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊருக்கு சென்றனர்.
ராக்கில் திக்ரித் பகுதியை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்த தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 46 இந்திய செவிலியர்களை கடத்திச் சென்று அங்குள்ள ஒரு கட்டிடத்தில் பூட்டி வைத்திருந்தனர்.
இதனால் தீவிரவாதக் குழுக்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் பயனாக நேற்று மாலை கடத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து இந்திய செவிலியர்களையும் தீவிரவாதிகள் விடுவித்தனர்.
செவிலியர்களை இந்தியாவிற்கு திரும அழைத்து வர டெல்லியில் இருந்து நேற்று ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 747 விமானம்,ஈராக் நாட்டிற்கு புறப்பட்டு சென்றது. இன்று காலை மும்பை வந்த அந்த விமானம் பின்னர் , பகல் 11.45 மணிக்கு ஏர் இந்தியா விமானம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அவர்களை கேரளா முதல்வர் உம்மன் சாண்டி வரவேற்றார். செவிலியர்களின் உறவினர்கள் அவர்களை கட்டித்தழுவி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய செவிலியர்கள், ஈராக்கில் இருந்து திரும்பி வருவோம் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என்றும், எங்களை மீட்க நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
இதையடுத்து, செவிலியர்களுக்கு தேவையான முதலுதவி உள்ளிட்ட மருத்துவ வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.