துணை அதிபர், துணை பிரதமர் பதவிகள் ரத்து. ஈராக் பிரதமர் அதிரடி நடவடிக்கை
ஈராக் நாட்டில் ஒருபுறம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் நாள்தோறும் பிரச்சனை ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறம் ஈராக் அரசியல் தலைவர்களிடையே பிரச்சனை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈராக் நாட்டில் துணை அதிபர், துணை பிரதமர் பதவிகளை அந்நாட்டு பிரதமர் அதிரடியாக ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது.
உள்நாட்டு போர் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களால் பெரும் பாதிப்பு அடைந்துள்ள ஈராக்கில் சிறப்பான ஆட்சி மற்றும் ஊழலை ஒழிக்க தேவையான திறமையான நிர்வாகம் வேண்டும் என கடந்த சில மாதங்களாக போராட்டங்கள் நடந்து வந்தன. மேலும், அங்கு நிர்வாக சீர்திருத்தங்களை செய்வதற்கு பிரதமர் ஹைதர் அல் அபாதிக்கு, ஷியா பிரிவு தலைவர் அயத்துல்லா அலி அல் சிஸ்டானி அழைப்பு விடுத்திருந்தார்.
ஈராக் நாட்டில் தற்போது 3 துணை அதிபர்கள், 3 துணை பிரதமர்கள் பதவியில் உள்ளனர். இந்நிலையில், பிரதமர் அபாதி நேற்று ஆன்லைனில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் துணை அதிபர், துணை பிரதமர் பதவிகளை ரத்து செய்யப்போவதாகவும், அமைச்சர் பதவியில் கட்சிவாரி ஒதுக்கீட்டை ரத்து செய்யப்போவதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ஈராக் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த நிர்வாக சீர்திருத்தங்களுக்கு ஈராக் அமைச்சரவை, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமரின் அறிவிப்புக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.