ஈராக்கில் சன்னி , ஷியா முஸ்லிம் பிரிவினருக்கு இடையில் தொடர்ந்து மோதல் நடக்கிறது. மேலும் ஈராக்கில் இருந்து அமெரிக்க படை வாபஸ் பெற்றதில் இருந்து தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வன்முறைகள் அதிகரித்துள்ளன. பாக்தாத் வடபகுதி அதாமியா பகுதியில் ஷியா பிரிவினரின் இமாம் முகமத் அல் ஜவாத் மசூதி உள்ளது. ஈராக்கின் பல பகுதிகளில் இருந்தும் இந்த மசூதியில் பிரார்த்தனை செய்ய ஏராளமானோர் புனித பயணம் மேற்கொள்கின்றனர்.
மசூதி அருகே நேற்று திடீரென குண்டு வெடித்ததில் 49 பேர் பலியானார்கள். 75க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அதேபோல் முசோல் பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற டிவி நிருபர் முகமது கரீம் அல் பத்ரானி, கேமராமேன் முகமது ஜகானம் ஆகியோரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். பலாத் நகரத்தில் உள்ள சிற்றுண்டி விடுதியில் தற்கொலை படை தாக்குதலில் 12 பேர் இறந்தனர். 35 பேர் காயம் அடைந்தனர். முதாதியா, பாயா பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 3 பேர் பலியானார்கள். 13 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
பாக்தாத் வட மற்றும் தென் பகுதியில் பாதுகாப்பு படைக்கும், தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 7 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈராக்கில் கடந்த 5 நாட்களில் நடந்த பல்வேறு தீவிரவாத தாக்குதலில் 130 பேர் பலியாகி உள்ளனர்.