இண்டர்நெட் மூலம் இ-டிக்கெட் வாங்கி பயணம் செய்யும் ரயில் பயணிகளுக்கு மேலும் ஒரு வசதியாக அவர்கள் கொண்டு செல்லும் விலை உயர்ந்த பொருட்களுக்கு காப்பீட்டு வசதி அளிக்கும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தால் ரயில் பயணிகள் தங்கள் பொருட்களை பற்றி கவலையில்லாமல் இனி ரயிலில் பயணம் செய்யலாம்.
இந்தியாவில் தினமும் சுமார் 20 லட்சம் பேர் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதில் கிட்டத்தட்ட பாதிபேர் இண்டர்நெட்டில் இ-டிக்கெட் எடுத்து பயணம் செய்வதாக ஒரு ஆய்வு அறிக்கை கூறுகின்றது. இந்நிலையில் இ-டிக்கெட் எடுத்து பயணம் செய்பவர்களின் செல்போன்,லேப்டாப் போன்ற விலையுயர்ந்த முக்கிய பொருட்கள் ரயிலில் பயணம் செய்யும்போது தொலைந்தாலோ அல்லது விபத்தின்போது சேதமடைந்தாலோ அவர்களுடைய பொருட்களின் மதிப்பிற்கு இன்சூரன்ஸ் தரப்படும் சேவை விரைவில் ஆரம்பமாக உள்ளது. ஆனால் தற்போதைக்கு இந்த வசதி இ-டிக்கெட் எடுத்து பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தை ரயில்வே நிர்வாகம் நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கூட்டாக செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்தை ரயில் பயணிகள் பெரும் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.