இருமாநிலங்களை இணைக்கும் நவராத்திரி பவனி புறப்பட்டது!

LRG_20151012105043251873

பண்டைய காலத்தில் திருவிதாங்கூர் ராஜ்யத்தின் தலைநகராக கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்மனாபபுரம் விளங்கியது. இங்குள்ள அரண்மனை வளாகத்தில் சரஸ்வதி கோயில் உள்ளது. இது கவியரசர் கம்பர் வழிபட்ட சரஸ்வதிதேவி சிலை என்று வரலாறு கூறுகிறது. மன்னர்கள் காலத்தில் இக்கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் நிர்வாக வசதிக்காக 1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மன்னர் காலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னரும் நவராத்திரி விழா தடையின்றி நடப்பதற்காக மன்னர் உத்தரவு படி சரஸ்வதிதேவி சிலை யானை மீது பவனியாக திருவனந்தபுரம் எடுத்து செல்லப்பட்டது. மன்னர் ஆட்சி மறைந்த பின்னரும், இருமாநிலங்களை இணைக்கும் விழாவாக நடைபெற்று வருகிறது. கேரளாவில் ஒரு நாள் தாமதமாக வரும் 14-ம் தேதி நவராத்திரி பூஜை தொடங்க உள்ளதை ஒட்டி நேற்று காலை பத்மனாபபுரத்தில் இருந்து இந்த பவனி புறப்பட்டது. அரண்மனை உப்பிரிகை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்னர் பயன்படுத்திய வாளை அரண்மனை அதிகாரி ராஜேஷ்குமார் எடுத்து கேரள தொல்பொருள்துறை இயக்குனர் பிரேம்குமாரிடம் கொடுக்க, அவர் அதை கவர்னர் சதாசிவத்திடம் கொடுத்தார். கவர்னர் அதை குமரி மாவட்ட தேவசம்போர்டு இணை ஆணையர் பொன் சாமிநாதனிடம் கொடுத்தார். இந்த வாளை ஊர்வலத்துக்கு முன்னால் தேவசம்போர்டு ஊழியர் ஒருவர் எடுத்து சென்றார். தொடர்ந்து போலீஸ் மரியாதையுடன் யானை மீது சரஸ்வதி விக்ரகம் ஏற்றப்பட்டு பவனி புறப்பட்டது. நாளை திருவனந்தபுரம் சென்றடையும். 14-ம் தேதி நவராத்திரி பூஜை தொடங்குகிறது.

Leave a Reply