கோலிவுட்டில் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள திரையுலக ரசிகர்களிடம் ‘தல’ என்ற வார்த்தை மிகவும் புகழ் பெற்றது என்பதை அனைவரும் அறிவோம். ‘தல’ என்ற சொல் அஜீத்தை குறிக்கும் என்பது சிறு குழந்தைக்கு கூட நன்கு தெரியும். இவ்வாறு இருக்கும் நிலையில் அனிருத் சமீபத்தில் பாடிய ஒரு பாடலில் டி.ராஜேந்தரை தல’ என்று கூறி அஜீத்தை இழிவுபடுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து வரும் ‘ரோமியோ ஜூலியட்’ என்ற படத்திற்காக அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார். டண்டனக்கா என்று தொடங்கும் அந்த பாடலில், “எங்க தல எங்க தல டி.ஆரு. சென்டிமென்டுல தார்மாறு, மைதிலி என்னை காதலின்னாரு, அவரு உண்மையா லவ் பண்ண சொன்னாரு. மச்சான் அங்க தாண்ட தல நின்னாரு’ போன்ற வரிகள் இடம் பெற்றுள்ளது.
அனைவருமே அஜீத்தை ‘தல’ என்று அன்புடன் அழைத்து வரும் நிலையில் அனிருத், டி.ராஜேந்தர்தான் எங்கள் தல’ என்று கூறி அஜித்தை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்ததாகவும், இதனால் கடும் ஆத்திரமடைந்த அஜீத் ரசிகர்கள் அனிருத்துக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. மேலும் இந்த பாடல் டி.ராஜேந்தரை இழிவு படுத்துவதாகவும் ஒருசிலர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதற்கு ஜெயம்ரவி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ‘டண்டனக்கா’ பாடலை தவறாக பொருள் கொள்ளச் செய்யும்படி சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்துக்கள் வெளியிட்டு உள்ளனர். ரசிகர்கள் இது போன்ற செயல்களை ஊக்கப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.