திமுக-காங்கிரஸ்-தேமுதிக கூட்டணியா?
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சிகள் பிரச்சார வியூகம் மற்றும் கூட்டணி அமைப்பதில் தீவிர முயற்சிகளில் உள்ளது. மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் வைகோ ஒருபுறமும், முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு தனித்து நிற்கவுள்ளதாக பாமக ஒருபுறமும், எந்த கட்சியுடன் கூட்டணி என்று கடைசிவரை மக்களை குழப்பும் விஜயகாந்த் ஒருபுறமும் இருக்கும் நிலையில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த கூட்டணிக்கு தற்போது ராகுல்காந்தி மட்டுமே தடையாக இருப்பதாகவும், அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் கும்பகோணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ நடைபயணம் வரவேற்கத்தக்கது. வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே சுமூக உடன்பாடு ஏற்பாட வாய்ப்பு உள்ளது’ என்று கூறியுள்ளார்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் இந்த கூட்டணியில் தேமுதிகவும் இணையும் என்றும், இதனால் அதிமுகவுக்கு கடுமையான போட்டியை கொடுக்க முடியும் என்றும் அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறியுள்ளனர். ஆனால் மக்கள் மத்தியில் அதிமுக மீது பெரிய அதிருப்தி எதுவும் இல்லாத நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலனளிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
English Summary: Is Congress and DMK will alliance for TN assembly election?