தாவூத் இப்ராஹிம் ஐந்து நட்சத்திர சொகுசு ஓட்டல் கேட்டாரா? சரத்பவார் திடுக்கிடும் தகவல்
மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவத்திற்கு காரணமான தாவூத் இப்ராஹிம், சரணடைய விரும்பியதாகவும், ஆனால் தாவூத் இப்ராஹிம் கோரிக்கையை சரத்பவார் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி உள்பட பலர் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், தாவூத் இப்ராஹிம் சரணடைவதை நிராகரித்தது ஏன் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
கோலாப்பூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார், தாவூத் இப்ராகிம் சரணடைய விதிக்கப்பட்ட நிபந்தனையை நிராகரித்தது, சரியான முடிவு என்றும் தான் சரணடைந்தால் ஐந்து நட்சத்திர ஓட்டல் உள்பட பல சொகுசு வசதி தர வேண்டும் என்றும், தன்னை துன்புறுத்த கூடாது என்றும் கோரிக்கை விடுத்ததாகவும், சட்டம் அனைவருக்கும் சமம் என்பதால் அவருடைய கோரிக்கையை தான் நிராகரித்ததாகவும் கூறினார்.
தற்போது பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதக கூறப்படும் தாவூத் இப்ராஹிமை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு மத்திய அரசு தொடர்ந்து பாகிஸ்தான் அரசை வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1993ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 250 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் தாவூத் இப்ராகிம் என்பது குறிப்பிடத்தக்கது.