அசைவ உணவகங்களில் ஆவி பறக்க… சுடச்சுட… தட்டில் வைக்கப்படும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற இறைச்சிகளின் சுவையும் நிறமும் நம்மைச் சுண்டி இழுக்கும். தீயில் நேரடியாகச் சுட்டும், தந்தூரி அடுப்புகளில், தணலில் காட்டப்பட்டும் தயாரிக்கப்படும் இந்த இறைச்சிகள், எண்ணெய் பளபளப்புடனும், எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரிக்காயால் அலங்கரிக்கப்பட்டு கொண்டுவரப்படும்போதே நாவில் எச்சில் ஊறும். தந்தூரி ரொட்டி, சிக்கன் மட்டும் அல்ல. இப்போது, பல்வேறு கிரில்டு உணவுகள் எல்லா நகரங்களிலும் கிடைக்கன்றன. எண்ணெயில் பொரிக்காமல், நெருப்பில் வாட்டிச் சாப்பிடுவது நல்லது என்ற கருத்தும் பரவலாக உள்ளது. உண்மையில், இது சரியா?
கிரில்டு உணவுகள் எப்படித் தயாராகின்றன?
இறைச்சியில் மசாலா தடவி, ஒருநாள் முழுவதும் அல்லது குறைந்தது ஆறு மணி நேரமாவது ஊறவைக்கின்றனர். இதனுடன், சாஸ், பதப்படுத்திகள், சுவையூட்டிகள் போன்ற அனைத்தையும் கலந்து , கிரில்டு பாக்ஸ் அல்லது தந்தூரி அடுப்பில் வேகவைக்கின்றனர். தீயில் 20 நிமிடங்களாவது சுட்டுஎடுக்கின்றனர். இறைச்சியை மட்டும் தீயில் சுட்டால், மோசமான விளைவுகள் அதிகம் இருக்காது. இறைச்சியுடன் எண்ணெய், மசாலா பொருட்கள், சுவை மற்றும் நிறத்துக்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்கள் நெருப்பில் வாட்டப்படும்போது, பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இறைச்சிகள் தரமானவையா?
குறைவான விலையில் கிடைப்பதால், வெளிமாநிலங்களில் இருந்து முறையாகப் பதப்படுத்தப்படாத இறைச்சியைக்கூட வாங்கிப் பயன்படுத்துகின்றனர். மீதமாகும் இறைச்சியை ஃப்ரீஸரில் வைத்துப் பயன்படுத்துகின்றனர். ஃபிரஷ்ஷான இறைச்சியை வாங்கிச் சமைக்கும்போது பாதிப்பு இல்லை. ஆனால், முறையாகப் பதப்படுத்தப்படாத இறைச்சிகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அசைவ ஹோட்டல்களில் 10, 15 முழுக் கோழிகள் கம்பியில் குத்தப்பட்டு கிரில் பாக்ஸில் சுழன்றுகொண்டே இருக்கின்றன. தவிர, மசாலாக்கள் தடவப்பட்ட நிலையில் இன்னும் நிறையக் கோழிகள், உள்ளே ஃப்ரீஸரில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஒரே நாளில் தீர்ந்துவிடுவது இல்லை. எப்போது வெட்டப்பட்டது எனத் தெரியாத இறைச்சியைத்தான், நாம் வாங்கிச் சாப்பிடுகிறோம்.
என்னென்ன பாதிப்புகள் வரலாம்?
விதவிதமான சுவைகளில் உணவை ருசிப்பது தவறு இல்லை. ஆனால், இத்தகைய உணவுகள் முழுக்க முழுக்க சுவைக்காக மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. இதனால், உடலுக்குக் கேடு விளைவிக்கும் செயற்கை உப்பு மற்றும் நிறங்கள், சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதைச் சாப்பிடுவதால், முதலில் அல்சர் வரும். ரசாயனங்கள் கலக்கப்பட்டு பழைய இறைச்சியை சாப்பிடும்போது வயிறு தொடர்பான புற்றுநோயாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. எப்போதேனும் ஓரிரு முறை சாப்பிட்டால், பிரச்னை இல்லை. தொடர்ந்து ஆண்டுக்கணக்காக சாப்பிடும் பழக்கம்இருந்தால், அவர்களுக்குப் புற்றுநோய் வரலாம். இதயம், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். வயிற்றுப்போக்கு, ஒற்றைத் தலைவலி, வயிற்றுவலி மற்றும் எரிச்சல், புற்றுநோய் செல்கள் அதிகமாதல் போன்ற பிரச்னைகள் உருவாகும்.
தீயில் சுட்ட சோளம் நல்லது!
சோளத்தை சுட்டு விற்பார்கள். அதில் ரசாயனங்களோ, நிறங்களோ, செயற்கை உப்புகளோ, எண்ணெயோ சேர்ப்பது இல்லை. சோளத்தைச் சுட்ட பிறகுதான், சுவைக்காக உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்க்கப்படுகின்றன. எனவே, இவற்றைச் சாப்பிடுவதால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது.