ஐ.டி. துறை அடிபட்டுவிட்டதா? கலங்க வேண்டாம் மாணவர்களே…

14இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி..!

இது பணம் கொட்டும் மந்திரச் சொற்களாக இருந்தது நேற்று வரை. ஒட்டு மொத்த மாணவக் கூட்டத்தின் முதல் சாய்ஸ் ஆகவும் இருந்தது. இன்று..? பலர் ஐ.டி. என்றால் அலறுகிறார்கள்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் ஐ.டி. துறை சார்ந்த தொழில் படிப்புகள் (பி.டெக். தகவல் தொழில்நுட்பம், பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ.) துறைகள் வேண்டாம் என சில கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்து வருகிறார்கள். கடந்த ஆண்டில் 19 பொறியியல் கல்லூரிகள் ஐ.டி. துறையைச் சார்ந்த படிப்புகள் வேண்டாம் என கைவிட்டன. இந்த ஆண்டும் 18 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் கைவிட விரும்புவதாக விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் இ.சி.இ. பிரிவில் உள்ள அரசு ஒதுக்கீட்டின்படி 42,966 இடங்கள் உள்ளன. ஆனால் அதில் 24,992 இடங்கள் மட்டுமே நிரம்பின. அதேபோல், பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவின் 33,505 இடங்களில் 15,684 இடங்கள் மட்டுமே நிரம்பின. அதாவது, பாதிக்குப் பாதிதான். பி.டெக். தகவல் தொழில்நுட்பப் படிப்பில் 16,466 இடங்களில் 6,705 மட்டுமே நிரம்பின. இந்த ஆண்டு இது இன்னும் குறையும்.

கடந்த ஆண்டு பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்த கோவிந்தராஜ், ”நான் தருமபுரியில் உள்ள குக்கிராமத்தில் இருந்து படிக்க வந்தவன். எங்கள் ஊரில் உள்ள பல இளைஞர்கள் இதே பொறியியல் படிப்புப் படித்து வெளி மாநிலத்திலும் வெளி நாட்டிலும் வேலைசெய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். என் அப்பா நானும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவேன் என்ற ஆசையில்தான் கடன் வாங்கிப் படிக்கவைத்தார்.

டிப்ளமோ படிப்பில் 94 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருந்தேன். பொறியியல் கலந்தாய்வில் இரண்டாம் நாளே கலந்துகொண்டேன். நான் தேர்ந்தெடுத்தக் கல்லூரி, பிரபல கல்லூரியின் பெயரைப்போலவே இருந்ததால் வித்தியாசம் தெரியாமல் தவறாக விண்ணப்பித்தேன். நான் சேர்ந்த கல்லூரியில் எந்த அடிப்படை வசதிகளுமே இல்லை. தகுதியான பேராசிரியர்கள், தரமான ஆய்வகம் எதுவுமே இல்லை.

என்னைப் போன்ற மாணவர்கள், தாங்களே படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலும் எதற்கும் பயனே இல்லை. கடந்த ஆண்டு கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூவுக்கும் எந்த நிறுவனமுமே வரவில்லை. நல்ல மார்க் வாங்கியும் இன்னமும் கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிக் கொண்டுதான் இருக்கிறேன். பல மாணவர்களும் என்னைப்போன்றுதான் இன்னமும் வேலை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்” என்றார்.

கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி, ”மாணவர்களிடம் தவறான கருத்து வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. கேம்பஸில் மாணவர்களை வேலைக்கு எடுக்க வரும் மென்பொருள் நிறுவனங்கள், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் என அனைத்துத் தரப்பு மாணவர்களையும் தேர்ந்தெடுக்கிறார்கள். ஐ.டி. துறைக்கு, பல துறை மாணவர்களும் தேவைப்படுகிறார்கள். இப்போது சில நிறுவனங்களில் ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள் செய்துவருகிறார்கள். அதனால்தான், கல்லூரி வளாகத் தேர்வுக்கு வரும் நிறுவனங்கள் சற்று குறைந்து இருக்கிறது. இதனால்கூட மாணவர்களும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளைக் கைவிட்டிருக்கலாம். மாணவர்களும், நாம் எந்தக் கல்லூரியில் படித்தால் படிக்கும்போதே வேலை கிடைக்கும் என எண்ணித்தான் கல்லூரியைத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறார்கள். பெரிய நிறுவனங்களும் பிரபலமான கல்லூரிக்குத்தான் முன்னுரிமை அளிக்கிறார்கள். ஐ.டி. துறையில் வேலைவாய்ப்பு திடீர் எனக் குறைவது தற்காலிக நிகழ்வுதான். வரும் காலத்தில் நிலைமைகள் மாறும். கல்லூரிகளும் மாணவர்களும் அவசரப்பட வேண்டாம்” என்றார்.

பிரபல மென்பொருள் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி சுசீந்தரன், ”வருங்காலத்தில் ஐ.டி. துறைக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் குவிந்துகிடக்கிறது. ஐ.டி. துறையைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மாணவர்கள் புதிதாகத் தேவைப்படுகிறார்கள். இனிவரும் காலத்தில் டெக்னாலஜியுடன்தான் நாம் அன்றாட வாழ்க்கையையே நடத்தப் போகிறோம். மாணவர்களும் கல்லூரிகளும் ஐ.டி. துறையைப் பற்றிய தெளிவு இல்லாததால்தான் தடுமாறுகிறார்கள்.

அதிகமான மார்க் எடுத்தால் மட்டும் ஒருவரை வேலைக்கு எடுப்பது இல்லை. நிறுவனங்கள் என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கின்றனவோ அவற்றைப் படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் வளர்த்துக்கொண்டால் வேலை அவர்களுக்கு காத்திருக்கிறது. பல கல்லூரிகள் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்களே தவிர, அவர்களுக்குத் தரமான கல்வி அளிப்பது இல்லை என்பதுதான் உண்மை. தரமான பேராசிரியர்கள் இல்லை, நல்ல உட்கட்டமைப்பு வசதிகள் மாணவர்களுக்கு செய்துகொடுப்பது இல்லை. வெறும் தியரியை மட்டும் மனப்பாடம் செய்து மார்க் குவிப்பதால் எந்தப் பயனும் இல்லை. நாங்கள் மாணவர்களிடம் எதிர்பார்ப்பது நல்ல கம்யூனிகேஷன், அவர்கள் படித்த படிப்பில் ஆழ்ந்த அறிவு. ஐ.டி. இப்போது நல்ல வளர்ச்சியில்தான் போய்க்கொண்டிருக்கிறது. இனிவரும் காலத்தில் ஐ.டி. துறை மட்டும் அல்ல; எந்தத் துறை படிப்பு படித்தாலும் அதில் திறமையுடன் இருந்தால் அவர்களுக்கு வேலை நிச்சயம். இப்போது சில கல்லூரிகள் ஐ.டி. துறை வேண்டாம் என்றாலும்.. சில ஆண்டுகள் கழித்து கல்லூரிகள் மீண்டும் ஐ.டி. துறை வேண்டும் என விண்ணப்பிக்கும்” என்றார்.

அஞ்ச வேண்டாம் மாணவர்களே!

Leave a Reply