தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீதான் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவால் அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் ஜெயலலிதா குற்றவாளி என்றும் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவருடைய எம்.எல்.ஏ பதவியும், முதல்வர் பதவியும் பறிக்கப்பட்டு தற்போது பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் நீதி வென்றுவிட்டது என்றும், தவறு செய்யும் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம் என்றும், நீதி இன்னும் உயிரோடு இருக்கின்றது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பால் அவரது அரசியல் எதிரிகள் மிகச்சிலரே சந்தோஷம் அடைந்துள்ளனர். ஆனால் அவருக்கு வாக்களித்த சுமார் 6 கோடி தமிழ் மக்கள் இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு அதிருப்திகளை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.
6 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரை, அதுவும் நாட்டு மக்களுக்கு இதுவரை எந்த முதல்வரும் செய்யாத பல அதிரடி திட்டங்களை கொண்டு வந்து அவற்றை வெற்றிகரமாக செயல்பட்டு வந்த ஒரு முதல்வரை ஒரு தீர்ப்பின் மூலம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். பிரபல பத்திரிகையாளர் சோ அவர்கள் கூறியதுபோல் இந்த தீர்ப்பால் தண்டனை பெற்றது ஜெயலலிதா அல்ல, 6 கோடி தமிழக மக்கள் என்பதுதான் உண்மை என்பதே பலரது கருத்தாக உள்ளது.
1991 முதல் 1996 வரை ஜெயலலிதா செய்த தவறுகளுக்கு ஏற்கனவே மக்களே அவருக்கு தண்டனை கொடுத்துவிட்டார். 1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா உள்பட அவருடைய கட்சியினர் அனைவரும் படுதோல்வி அடைந்தனர். இரு தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா இரண்டிலும் தோல்வி அடைந்து, அதன்பின்னர் ஐந்து ஆண்டுகள் சட்டமன்றத்திற்கே செல்லமுடியாத ஒரு நிலை ஏற்பட்டது. இந்த தண்டனையே அவர் செய்த தவறுகளுக்கு போதுமானது என பெரும்பாலான பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் நடந்த மோசமான திமுக ஆட்சியால் மக்கள் வெறுப்படைந்து, மீண்டும் ஜெயலலிதாவை முதல்வராக தேர்ந்தெடுத்தனர். இரண்டாவது முறையாக முதல்வராக கடந்த 2011ஆம் ஆண்டு தேர்வான ஜெயலலிதா, முதலில் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்று, அதன்பின்னர் மக்களுக்கு தொண்டு செய்வதையே குறிக்கோளாக கொண்டு பல அதிரடி திட்டங்களை தீட்டியுள்ளார்.
இந்த வழக்கை தொடுத்த சுப்பிரமணியசாமி, 2011ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து அவருடைய தயவால் வெற்றி பெற்று மத்திய அமைச்சராகவும் ஆனார். ஜெயலலிதா மீது, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடுத்த ஒருவர், அவருடைய உதவியை மீண்டும் நாடியது ஏன்? இன்று இந்த தீர்ப்பை வரவேற்று பேசியுள்ள அத்தனை தலைவர்களும் கடந்த பத்தாண்டுகளில் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்று பதவி சுகத்தை அனுபவித்தவர்கள்தான். டாக்டர் ராமதாஸ், வைகோ, விஜயகாந்த், காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி ஆகிய அனைத்து கட்சிகளும் வெவ்வேறு காலகட்டங்களில் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்ற கட்சிகள்தான். அப்போதெல்லாம் அவர்களுக்கு தெரியவில்லையா இவர் ஊழல் செய்தவர் என்று பாமர மக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்த கேள்விகளுக்கு இந்த தலைவர்கள் என்ன பதில் அளிக்க போகிறார்கள்/
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தன் மீதும் தனது குடும்பத்தினர்கள் மீதும் உள்ள வழக்குகளை வாபஸ் பெறுவதற்காக எவ்வளவு குனிய வேண்டுமோ அவ்வளவு குனிந்து மக்களை பற்றி சிந்திக்காமல் தன்னுடைய சொந்த மக்களை மட்டுமே சிந்தித்து வாழ்ந்து கொண்டிருக்கும் போலித்தலைவர்கள் மத்தியில், தீர்ப்பு வருவதற்கு முந்தைய நாள் கூட அம்மா சிமெண்ட் திட்டத்தை நிறைவேற்றி மக்களுக்காகவே வாழ்ந்த ஒரு தலைவிக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்ததை தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என பரவலாக கருத்து கூறப்பட்டு வருகின்றது.