பிரபல நடிகரும் நாடாளும் மக்கள் கட்சி தலைவருமான கார்த்திக் இன்று காங்கிரஸ் அலுவலகத்தில் புதிய தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை திடீரென சந்தித்து பேசினார். இதனால் காங்கிரஸ் கட்சியில் தன்னுடைய கட்சியை இணைத்துவிட்டதாக செய்தி பரவியது.
பின்னர் வெளியே வந்து நிருபர்களிடம் பேசிய கார்த்திக், ‘இந்தத் திருமணம் எப்போதும் விவாகரத்தில் முடியாது” என்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டதுபோலவே கருத்து கூறினார். ஆனால் திடீரென சில நிமிடங்கள் கழித்து ”நான் காங்கிரஸ் இணையவில்லை. காங்கிரஸுக்கு என்னுடைய ஆதரவு தெரிவிக்கவே நேரில் வந்தேன்” என்று அந்தர் பல்டி அடித்தார். இதனால் நிருபர்கள் குழப்பம் அடைந்தனர்.
கார்த்திக் காங்கிரஸில் சேர்ந்தாரா? இல்லையா? என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் எதுவும் வரவில்லை. காங்கிரஸ் தரப்பில் இருந்தும் கார்த்திக் தங்களுடைய கட்சியில் இணைந்த்தாக அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பல செய்தி நிறுவனங்கள் கார்த்திக் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டதாகவே செய்திகள் வெளியிட்டுள்ளன.