பீகாரில் பதவியேற்ற 2வது நாளே குழப்பமா? லாலு மகள் திடீர் போர்க்கொடி?
பீகார் சட்டமன்றத்தேர்தலில் நிதீஷ்குமார், லாலு கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து சமீபத்தில் மீண்டும் நிதீஷ்குமார் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். மேலும் லாலு மகன் துணை முதல்வராகவும் பதவியேற்றார். இந்நிலையில் லாலுவின் மகள் மிசா பாரதி தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்ததாகவும், ஆனால் தனக்கு எந்த அமைச்சர் பதவியும் மெகா கூட்டணி தராததால் ஆத்திரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரை சமாதானப்படுத்த நிதிஷ்குமார் தூது அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ராஷ்ட்ரிய ஜனதா கட்சி நிர்வாகிகள், “லாலு மகள் மிசாவை சமாதானப்படுத்த மெகா கூட்டணியின் பிரச்சார வடிவமைப்பாளர் பிரஷாந்த் கிஷோரை முதல்வர் நிதீஷ்குமார் அனுப்பி சமாதனம் செய்ததாகவும், விரைவில் மிசாவுக்கு ராஜ்யசபா எம்பி. பதவி கொடுக்கப்படும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.
தனக்கு அமைச்சர் பதவி கிடைக்காதமையால் பெரிதும் எமாற்றம் அடைந்த மிசா பாரதி, பதவி ஏற்பு விழாவிலும் மெளனமாக இருந்ததாக கூறப்படுகிறது. நிதீஷ்குமார், லாலு கூட்டணி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என பாஜக கருத்து தெரிவித்த வந்த நிலையில் பதவியேற்ற இரண்டாவது நாளே குழப்பம் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.