ஆட்டோ டிரைவரை அடித்தாரா மு.க.ஸ்டாலின். வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு
மக்களை நேரடியாக சந்திக்கும் ‘நமக்கு நாமே’ பயணத்தின் முதல்கட்ட பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கி திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடித்த மு.க.ஸ்டாலின், நேற்று முன் தினம் முதல் இரண்டாவது கட்ட பயணத்தை நீலகிரியில் இருந்து துவக்கினார். நீலகிரியில் தொடங்கி, தெப்பக்காடு, கூடலூர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை ஸ்டாலின் சந்தித்து வரும் நிலையில், கூடலூரில் ஒரு ஆட்டோ டிரைவர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுக்க முயன்றார். அப்போது அந்த ஆட்டோ டிரைவரின் கன்னத்தில் ஸ்டாலின் அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளங்களில் தற்போது மிக வேகமாக பரவி வருகின்றது.
அந்த வீடியோ காட்சியில், ஸ்டாலின் மக்கள் மத்தியில் நடந்து வருகிறார். கூட்ட நெரிசல் அதிகரிக்க, மக்களை விலக்கிக்கொண்டு அவர் கூட்டத்தில் இருந்து வெளியே நடந்து வருகிறார். அப்போது அவருக்கு நெருக்கமாக சென்று தனது செல்போனில் செல்ஃபி எடுக்க முயல்கிறார் அந்த ஆட்டோ டிரைவர். அப்போது ஆட்டோ டிரைவரின் கன்னத்தில் அறைந்து, அவரை தள்ளி விடுகிறார் ஸ்டாலின். தொடர்ந்து அவருடன் வரும் பாதுகாவலர்களும் ஆட்டோ டிரைவரை தள்ளி விடுகின்றனர். இதனால் அந்த ஆட்டோ டிரைவர் அதிர்ச்சி அடைகிறார்.
ஆட்டோ டிரைவரை ஸ்டாலின் தாக்கிய இந்த சம்பவம் கூடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்குள்ளான ஆட்டோ டிரைவரின் பெயர் திலீப் என்று கூறப்படுகிறது. இந்த பிரச்னையை அடக்க தி.மு.க.வினரும், பிரச்னையை பெரிதாக்க அ.தி.மு.க.வினரும் தொடர்ந்து முயற்சித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, மெட்ரோ ரயிலில் பயணித்த போது, பயணி ஒருவரை ஸ்டாலின் தாக்கியதாக எழுந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் அடுத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது.