திமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்என்பதை திமுக தலைவர் கருணாநிதி நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மறைமுகமாக தெரிவித்துள்ளதாக ஸ்டாலின் ஆதரவாளர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நேற்று நடைபெற்ற ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பேசிய கருணாநிதி, ஆறாவது முறையாக மீண்டும் முதல்வராகும் ஆசை இல்லை என்று கூறியுள்ளார். இதன்மூலம் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்பதை அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கருணாநிதி மேலும் பேசியதாவது: ” “வர இருக்கிற காலங்களில் பல்வேறு சோதனைகளை கடந்து செல்வது எப்படி? எவ்வாறு யாருடன் துணை வைத்து கொள்வது என்பட பற்றி அறிந்து கொள்வதற்காக இந்த விழா நடைபெறுவதாக கருதுகிறேன்.
இங்கு பலபேருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. அப்படி வழங்கப்படும் பரிசு பொருட்கள் ஏழை எளிய சாமானிய மக்கள் பயன்படுகிற வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது. இந்த விழா ஆடம்பரத்துக்காக நடத்தப்படவில்லை. சாமானிய மக்களின் தேவை அறிந்து இந்த பொருட்கள் பயன் அளிக்ககூடிய விழாவாக இது அமைய வேண்டும்.
இந்த பொருட்களை பெறுகின்ற மக்களின் வாழ்த்துக்கள் மூலம் தம்பி ஸ்டாலின் வயதை மேலும் பத்து, இருபது ஆண்டுகள் பெற்று தரும் என்று நம்புகிறேன். எனக்கு முன்னால் பேசியவர்கள் நான் 6வது முறையாக முதல்வராக வேண்டும் என்று கூறினார்கள். அந்த ஆசை எனக்கு இல்லை. நான் விரும்புகின்ற ஆசையெல்லாம் தி.மு.க.வை கட்டி காக்க வேண்டும் என்பதுதான்.
கடைசி தொண்டன் உள்ள வரை இந்த கழகத்தை எதிரிக்கு விட்டு கொடுக்க முடியாது. சமுதாய–பெருளாதாரத்தில் வாடி வதங்கி இருக்கிற தோழர்கள், ஏழை எளியவர்கள், தங்கள் வாழ்வதற்கு இந்த கழகத்தை விட்டால் வேறு வழியில்லை என்று உணர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் நலனுக்காக இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும். அப்படி காப்பாற்றி இயக்கத்தை வாழ வைப்பதற்கு பாடுபட வேண்டும். இல்லையென்றால் நாம் நன்றி மறந்தவர்கள் ஆவோம்.
அண்ணாவின் தம்பிகள் என்ற பெருமையோடு நமக்கு இருக்கிற கடமைகளை நிறைவேற்ற வேண்டும். திராவிட இயக்கத்தின் பெயர் நீடித்து நிலைநிறுத்த வேண்டும். ஒரு நாள், இரு நாள் விழா நடத்தி இதை முடித்து விட்டதாக கருதக்கூடாது. நீண்ட பெரும் கடமையாற்ற தமிழகத்தில் பிறந்து இருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது.
தமிழ் வாழ, திராவிடம் வாழ நாமெல்லாம் ஒன்றிணைந்து கூட்டாக தொடர்ந்து உழைத்திட வேண்டும். முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காக இந்த இயக்கத்தை தொடங்க வில்லை. திராவிட இயக்கத்தை சீரும் சிறப்புடன் வழி நடத்தவும், திராவிடத்தை கட்டிக்காப்பதற்கும், சுய மரியாதை உணர்வை விட்டு தராமல் சுயமாக என்றென்றும் வாழ்வோம். திராவிட சமுதாயத்தை காப்பாற்றும் சிப்பாய்களாக நாம் நடமாடுவோம். திராவிட இயக்க வழியில் இணைந்து பாடுபடுவோம்” என்று பேசினார்.