லலிதமோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் உதவியதாக எழுந்திருக்கும் விவகாரம் குறித்து கடந்த சில நாட்களாக உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டு இருந்து வந்தபோதிலும், இதுகுறித்து பிரதமர் மோடி கண்டுகொள்ளாமல் உள்ளார். இது பாஜக தொண்டர்களிடையேகூட அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
சுஷ்மா ஸ்வராஜ் அத்வானியின் தீவிர ஆதரவாளர் என்பதால்தான் பிரதமர் மெளனம் காப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் நேற்று அத்வானி, திடீரென மோடியை தாக்கும் விதத்தில் ‘இந்தியாவில் மீண்டும் எமர்ஜென்ஸி வர வாய்ப்பு’ இருந்ததாக ஒரு பெரிய அணுகுண்டை கொளுத்தி போட்டதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்தர மோடி முன்னிறுத்தப்பட்ட போது அவரை எதிர்த்த மூத்த தலைவர்களில் ஒருவர் சுஷ்மா ஸ்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவருக்கு வெளியுறத்துறை அமைச்சர் பதவி கொடுத்து அவரையும் அத்வானியையும் சமாதானப்படுத்தும் நோக்கில் மோடி நடந்து கொண்டார்.
இருப்பினும் அமைச்சரானது முதல் மோடி அரசுக்கு ஆதரவாக சுஷ்மா ஊடகங்களிடம் அதிகம் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மோடி பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைந்தபோதுகூட மற்ற அமைச்சர்களை போல சுஷ்மா ஸ்வராஜ், மோடியின் துதிபாடவில்லை. இதனால் பாஜக மேலிடம் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. லலித்மோடி விவகாரத்தில் கூட சுஷ்மா ஸ்வராஜை மாட்ட வைத்ததுகூட மோடியின் ஆதரவாளர்கள்தான் என கூறப்படுகிறது.
மேலும் லலித்மோடி விவகாரத்தில் சிக்கிய ராஜஸ்தானின் முதலமைச்சரான வசுந்தரா ராஜேவும் அத்வானி ஆதரவாளர் எனக் கூறப்படுகிறது. எனினும், இவருக்கு லலித் மோடியுடன் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இருந்த குடும்ப ரீதியான நட்பு காரணமாக சிக்கியுள்ளார் எனக் கருதப்படுகிறது.