பிரேமலதா முதல்வர் வேட்பாளரா? திமுக-மக்கள் நலக்கூட்டணி அதிர்ச்சி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு மார்ச் முதல் வாரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக கூட்டணி அமைப்பு மற்றும் தேர்தல் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து விருப்பமனுக்களையும் பெற்று வருகிறது. அதிமுக, திமுக, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் விருப்பமனுக்களை பெற்று அவற்றை பரிசீலித்து வரும் நிலையில் தேர்தலில் போட்டியிட தேமுதிக சார்பிலும் கடந்த சில நாட்களாக விருப்பமனுக்களை பெற்று அவர்களிடம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேர்காணலும் செய்து வருகிறது. இந்த நேர்காணல் நேற்று ஐந்தாவது நாளாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நேர்காணலில் ஒரு முக்கிய கேள்வியாக தேமுதிக சார்பில் முதல்வர் வேட்பாளாராக யாரை நிறுத்தலாம் என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என நேர்காணலில் கலந்து கொண்டவர்கள் கூறியதாக தேமுதிக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து, தே.மு.தி.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது: விஜயகாந்த்துக்கு பதில் பிரேமலதாவை, முதல்வர் வேட்பாளாராக அறிவிக்கலாம் என்ற, புதிய ஆலோசனை கட்சியில் நடைபெற்று வருகிறது. பிரேமலதாவை, முதல்வர் வேட்பாளராக ஏற்க, பா.ஜ., சம்மதித்து உள்ளதாகவும், தற்போது, கட்சி முழுமையாக பிரேமலதாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளராக பெண் ஒருவரும் இருக்கும் போது, தே.மு.தி.க., சார்பிலும், முதல்வர் வேட்பாளராக ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் இருப்பினும் இருதி முடிவை விஜயகாந்த் முடிவு செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
தேமுதிகவின் முதல்வர் வேட்பாளராக பிரேமலதாவை அறிவித்தால் இந்த அறிவிப்பை திமுக ஏற்றுக்கொள்ளாது என்றும் இது திமுக-தேமுதிக கூட்டணிக்கு வழிவகுக்காது என்றும், அதேபோல் மக்கள் நலக்கூட்டணியும் பிரேமலதாவை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளாது என்றும் பிரபல அரசியல் விமர்சகர் ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார்.