மத்திய அரசு தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தேவைப்பாட்டால் தமிழகத்தில் அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 355-ன் கீழ் முதல்கட்டமாக மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு அதிகாரத்தை மட்டும் கையில் எடுக்க பாரதிய ஜனதா தயங்காது என்று பாரதிய ஜனதா கட்சியின் மேலிடத்தலைவர்கள் ரகசிய திட்டம் தீட்டி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள தமிழிசை செளந்தரராஜன், “மத்திய அரசு திட்டமிட்டு அரசியல் சாசனப் பிரிவு 355-ஐ நோக்கி செல்லவில்லை. ஆனால், சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள், தீவிரவாதம் தொடர்பானவற்றை நாங்கள் கவனித்து வருகிறோம். தமிழக மக்களை பாதுகாக்க வேறுவழி இல்லை என்றால் இங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்றார்.
இந்நிலையில் பாஜகவின் முக்கிய தலைவரான சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் குடியரசுத் தலைவரிடம் அளித்த மனுவில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என்றும், அங்கு 355 பிரிவை பயன்படுத்தி குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.