ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ர்ஜினிகாந்த் இயக்கிய கோச்சடையான்’ திரைப்படத்தை தயாரித்த மீடியா ஒன் நிறுவனம் வாங்கிய வங்கிக் கடனை செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, கடனுக்கு ஈடாக உத்தரவாதம் அளித்த லதா ரஜினியின் 2 ஏக்கர் நிலத்தை ஏலம் விடப்போவதாக எக்சிம் வங்கி அறிவித்துள்ளது, இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
‘கோச்சடையான்’ திரைப்படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் நிறுவனம் பலகோடி பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்தது. ரஜினி மகள் செளந்தர்யா இயக்கத்தில், இந்தியாவின் முதல் மோஷன் கேப்ட்சர் அனிமேஷன் படமாக இப்படம் உருவானது.
இந்நிலையில் இப்படத்திற்காக எக்ஸிம் வங்கியில் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், 20 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தது. அந்நிறுவனம் வாங்கிய கடனுக்காக ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், ஸ்ரீபெரும்புதூரில் தனது பெயரில் உள்ள 2.13 ஏக்கர் நிலத்தை ஈடாக காட்டி கேரண்டராக கையெழுத்து போட்டிருந்தார்.
இந்நிலையில் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் வங்கியில் வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்து 22.21 கோடி ரூபாயை உரிய காலத்திற்குள் செலுத்த தவறியதால், மேற்கூறிய ஏல அறிவிப்பை தினசரி நாளிதழ் ஒன்றில் வெளியிட்டு, லதா ரஜினிகாந்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதனிடையே மீடியா ஒன் குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எக்ஸிம் வங்கியில் இருந்து தாங்கள் 20 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்ததாகவும், தங்களது சொந்த திறன் மற்றும் தொழில் அடிப்படையிலேயே மேற்படி கடனை வாங்கி இருந்ததாகவும், வருகிற 2015 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.