பாஜகவில் இருந்து விலகுகிறாரா எஸ்.எம்.கிருஷ்ணா?
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் தஞ்சம் அடைந்த முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாஜகவில் இருந்தும் விலகவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த தகவலை கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
எஸ்.எம்.கிருஷ்ணா கட்சியில் இருந்து வெளியேற மாட்டார் என்றும், இது தோல்வி பயத்தில் காங்கிரஸ் கிளப்பி வட்ட வதந்தி என்றும் தெரிவித்தார்.
“மூத்த அரசியல் தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணா தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரிடம் நான் பேசினேன். கட்சியில் இருந்து வெளியேறுவது தொடர்பான தகவல்களை அவர் மறுத்தார். கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அவரது குடும்பத்தினர் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விரும்பினால் வாய்ப்பு வழங்க கட்சி தயாராக உள்ளது. வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியதும், பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்வார்” என்றும் அசோக் கூறினார்.