இதுதான் புதிய டிஜிட்டல் இந்தியாவா? ராகுல்காந்தி ஆவேசம்

இதுதான் புதிய டிஜிட்டல் இந்தியாவா? ராகுல்காந்தி ஆவேசம்

பசு பாதுகாப்பாளர்கள் என்ற போர்வையில் அப்பாவிகள் அடித்து கொல்லப்படுவதுதான் புதிய டிஜிட்டல் இந்தியாவா? என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் என்ற மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு 28 வயது வாலிபர் பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் இருக்கும் குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த வாலிபரை தூக்கிச் சென்ற போலீசார், அவருக்கு முதலுதவி அளிக்காமல் முதலில் பசுவை பாதுகாப்பான இடத்தில் விடுவதில் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் அந்த வாலிபர் தகுந்த சிகிச்சை கிடைக்காத காரணத்தால் மரணம் அடைந்தார்.

இதுகுறித்து விசாரணை செய்து 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ராஜஸ்தான் மாநில அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்த வெளியான செய்திகளின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை கடுமையாக இன்று சாடியுள்ளார்.

‘உயிருக்கு ஆபத்தானவரை காப்பாற்ற கொண்டு சென்ற போலீசாருக்கு கடமைக்கு இடையில் தேனீர் ஓய்வா? வெறுப்புணர்வின் மூலம் மனிதநேயம் மாற்றப்பட்டு, மக்கள் நசுக்கி சாகடிக்கப்படுவதற்கு பெயர்தான் மோடியின் காட்டுமிராண்டித்தனமான ‘நியூ இந்தியா’ என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply