அமெரிக்க விமானம் ஒன்று அல்கொய்தா தீவிரவாதிகளால கடத்தப்பட உள்ளதாக நேற்று மாலை டுவிட்டரில் ஒரு மிரட்டல் வந்ததால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டுவிட்டரில் அந்த மிரட்டல் பதிவு செய்த மறுநிமிடமே பதிவு செய்யப்பட்ட கம்ப்யூட்டரின் ஐ.பி. முகவரி அமெரிக்காவில் உளவுத்துறையான FBI க்கு உடன் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சிறிது நேரம் கழித்தபின்னர்தான் தெரிந்தது நெதர்லாந்தில் இருந்து 14 வயது சிறுமி ஒருவர் விளையாட்டிற்காக இந்த மிரட்டலை செய்துள்ளார் என்று, பின்னர் அவர் அமெரிக்க விமான அதிகாரிகளுடன் மன்னிப்பு கேட்டார்.
நேற்று மாலை டுவிட்டர்ல் சாரா என்ற பெயருடைய ஒருவர் டுவிட்டரில் @QueenDemetriax_ என்ற கணக்கில் இருந்து தன்னுடைய பெயர் இப்ராஹிம் என்றும், தான் சமீபத்தில்தான் அல்கொய்தா அமைப்பில் இணைந்ததாகவும், கூடிய விரைவில் அமெரிக்க விமானத்தை கடத்த இருப்பதாகவும் பதிவு செய்தார். அவர் இந்த செய்தியை பதிவு செய்த மறுநிமிடம் அமெரிக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து பதில் வந்தது. இந்த தகவலை மிகவும் சீரியஸாக தாங்கள் எடுத்துக்கொள்வதாகவும், உடனடியாக இந்த கம்ப்யூட்டரில் ஐ.பி. முகவரியை FBI க்கு அனுப்புவதாகவும் தெரிவித்தனர். இந்த வதந்தி கிளம்பிய உடனே அந்த டுவிட்டரில் 30,000 பாலோயர்கள் மளமளவென குவிந்தனர். டுவிட்டர் டிரெண்டில் இந்த தகவல் உடனடியாக இணைக்கப்பட்டது.
நிலைமை விபரீதமாக போவது தெரிந்ததும் உடனடியாக சாரா என்பவர் தான் ஆப்கானிஸ்தானில் இல்லையென்றும், நெதர்லாந்தில்தான் இருப்பதாகவும், தான் 14 வயது சிறுமி என்றும், தான் விளையாட்டாக செய்ததை பெரிதுபடுத்தவேண்டாம் என்றும், இதற்காக தான் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்தார். அதன்பின்னர் அவர் பதிவு செய்த டுவிட்டும், விமான அதிகாரிகள் பதிவு செய்த டுவிட்டும் உடனடியாக டெலிட் செய்யப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அமெரிக்காவில் சிலமணிநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.