விஜய்மல்லையா லண்டன் எஸ்டேட்டில் பதுங்கியுள்ளாரா?
இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளிடம் இருந்தும் ஆயிரக்கணக்கான கோடிகள் கடன் வாங்கிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் இருந்து தப்பிவிட்டார் என்றும் அவர் இங்கிலாந்து நாட்டில் தலைமறைவாக இருக்கின்றார் என்றும் கூறப்படும் நிலையில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனுக்கு வடக்கேயுள்ள கிராமப்புற பகுதியில் தனக்கு சொந்தமான மிகப்பெரிய எஸ்டேட் இல்லம் ஒன்றில் விஜய் மல்லையா வசித்து வருவதாக கூறப்படுகிறது.
லண்டன் அருகே ஹெர்ட்போர்ட்ஷயரில் உள்ள டெவின் என்ற கிராமத்தில் உள்ள குவீன் ஹூ லேனில் ஆடம்பர பங்களா ஒன்றில் மல்லையா வசித்து வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இந்த பங்களாவுக்கு அவர் வழக்கமாக வரும் காலங்களில் அருகில் உள்ள மதுபான விடுதிகளுக்கு அடிக்கடி வருகை தருவார் என்றும், ஆனால் இம்முறை அவர் பங்களாவில் இருந்து வெளியே வராமல் பரந்து விரிந்த 30 ஏக்கர் எஸ்டேட் உள்ளேயே பதுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மார்ச் 2-ம் தேதி வங்கிகளின் கூட்டமைப்பு, இவரது பாஸ்போர்ட்டை முடக்கி கைது செய்ய வேண்டும் என்று கடன் மீட்புத் தீர்ப்பாயத்திடம் கோரிக்கை வைத்த அதே தினத்திலேயே இவர் இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டன் சென்றிருக்கலாம் என்றும் லண்டன், பேக்கர் தெரு பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து மல்லையா தனது ‘லேடி வாக்’ எஸ்டேட் பகுதிக்கு சமீபத்தில் வந்திருக்கலாம் என்று தெரிகிறது.
லண்டனில் மட்டுமின்றி விஜய் மல்லையாவுக்கு கலிபோர்னியாவிலும் ஏகப்பட்ட சொத்துகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களுக்கு அதிகமாகவே வெளிநாடுகளில் சொத்துக்கள் வவத்திருப்பதாகவும், அவருடைய வெளிநாட்டு சொத்துக்களை கைப்பற்றினாலே அனைத்து வங்கிகளின் கடன்களையும் அடைத்துவிடலாம் என்றும் கூறப்படுகிறது.
பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை விஜய் மல்லையா பெற்றுள்ளார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்த போது, ‘விஜய் மல்லையா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.