தற்காலிக மனைவிகளாக மாற மறுக்கும் பெண்களுக்கு மரண தண்டனை. ஐ.எஸ் அமைப்பின் வெறிச்செயல்
ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் பெரும்பாலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ். அமைப்பு சமீப காலமாக பல பெண்களை கடத்தி அவர்களை பாலியல் அடிமைகளாக நடத்துவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அவ்வாறு பாலியல் அடிமைகளாக மாற மறுக்கும் பெண்களை கொடூரமாக கொன்று குவிப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் தற்காலிக மனைவிகளாக மாற மறுத்த 250 இளம்பெண்களை கொடூரமாக ஐ.எஸ். இயக்கத்தினர் கொலை செய்ததாக குருதிஷ் ஜனநாயகக் கட்சிச் செய்தித் தொடர்பாளர் சயீத் மமூஸ்னி என்பவர் திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ். அமைப்பினர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மொசூல் என்ற பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள மறுப்பு தெரிவித்த 19 பெண்களை கொலை செய்ததாகவும், அதேபோல் கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட்டிலும் சுமார் 500 யாஜிதி இனப்பெண்களை ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளதாகவும், மேலும் கடந்த அக்டோபரில் மேலும் 500 யாஜிதி பெண்கள் மற்றும் சிறுமிகளை ஐ.எஸ். கடத்தி சென்றதாகவும் சயீத் மமூஸ்னி கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா மொசூல் நகரம் குறித்து கூறியபோது, “இந்த ஆண்டு இறுதிவாக்கில் ஐ.எஸ் பிடியிலிருந்து மொசூல் விடுபடுவதற்கான நிலைமைகளை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.