ஈராக், சிரியா மற்றும் பல நாடுகளை கைப்பற்றி அவற்றை ஒன்றிணைத்து இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் அமைத்து அதில் பல தீவிரவாத செயல்களை செய்து வருகின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள ஒடுக்க தாக்குதல் நடத்தும் அமெரிக்கா மற்றும் அந்நாட்டுக்கு துணை போகும் பிரிட்டன் போன்ற நாடுகளை மிரட்ட இரு நாட்டு பிரஜைகளை பிணைக் கைதிகளாக்கி தலையை துண்டித்து கொலை செய்து வருகின்றனர்.
இதுவரை அமெரிக்க பத்திரிகை நிருபர்கள் 2 பேரையும், இங்கிலாந்து தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சமூக சேவகர் டேவிட் ஹெய்ன்ஸ் ஆகிய 3 பேரையும் தலை துண்டித்து படுகொலை செய்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அந்த வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இங்கிலாந்து தொண்டு நிறுவன பணியாளர் ஆலன் ஹென்னிங்(47) என்பவரையும் தலை துண்டித்து தீவிரவாதிகள் கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவரை கொலை செய்த வீடியோ காட்சி சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இந்த படுபாதக செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ’மற்றவர்களுக்கு உதவி செய்யப்போன ஆலன் ஹென்னிங்கை கடத்திச் சென்று கொன்றதில் இருந்து இந்த தீவிரவாதிகள் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமானவர்கள்? என்பது தெளிவாகின்றது.
இவர்களை வேட்டையாடி, நீதியின் முன்பு நிறுத்துவதற்கு தேவையான அனைத்தையும் செய்வோம்’ என்று அறிவித்துள்ளார்.