பெங்களூரில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக இணையதளம் நடத்தி வந்த மெஹதி மசூர் பிஸ்வாஸ் என்ற நபரை பெங்களூர் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இதற்காக பெங்களூர் போலீஸாரை பழிக்கு பழி வாங்குவோம் என ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மெஹதி மசூர் பிஸ்வாஸ். இவர் பெங்களூருவில் டுவிட்டர் சமூக வலைதளம் மூலம் ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்க்கும் வேலையை செய்து வந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பெங்களூரு போலீசாரை பழி வாங்குவோம் என ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து டுவிட்டர் மூலம் விடுத்துள்ள மிரட்டலில், ”எங்கள் சகோதரரை உங்களிடம் விட முடியாது. இதற்கான விளைவை விரைவில் சந்திக்க வேண்டியது இருக்கும். இதற்கான பழிக்கு பழி செயல் விரைவில் வருகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, பெங்களூரு போலீசார் உஷார்படுத்தப்பட்டு, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.