அல்லாஹ் இறக்கியனுப்பிய அற்புத உணவு

அல்லாஹ் இறக்கியனுப்பிய அற்புத உணவு

9மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் மிகத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தான். பல அதிசயங்களை ஈஸா (அலை) அவர்களை நிகழ்த்தச் செய்தான் இறைவன். அவர்கள் நிகழ்த்திக் காட்டியபோதும் மிகச் சிலரே ஈஸா (அலை) அவர்களை இறைத்தூதராக ஏற்றுக் கொண்டனர்.

அல்லாஹ்வின் பாதையை ஏற்று, தம்முடன் சேர்ந்து மற்றவர்களுக்குப் போதிக்கத் தமக்கு உதவுபவர்கள் யாரென்று மக்களிடம் ஈஸா (அலை) கேட்டபோது சீடர்கள் ஹவாரிய்யூன் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டதாக சாட்சியளித்தனர்.

ஈஸா (அலை) தமது சீடர்களை நோன்பிருக்கச் சொன்னார்கள். அதன்படியே சீடர்களும் முப்பது நாட்கள் நோன்பிருந்தார்கள். கடைசி நாள் முழுவதும் நோன்பிருந்து இஃப்தார் நேரம் நெருங்கும்போது அதாவது நோன்பு திறக்கும் நேரத்தை நெருங்கும்போது ஹவாரிய்யூன் சீடர்கள் ஈஸா (அலை) அவர்களிடம், “ஈஸாவே! இறைவன் வானத்திலிருந்து எங்களுக்காக உணவை இறக்கி வைக்க முடியுமா?” என்ற ஒரு கோரிக்கையை வைத்தனர்.

உடனே ஈஸா (அலை) “இறைவனின் சக்தியையா சந்தேகிக்கிறீர்கள்? நீங்கள் உண்மையான இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் இவ்வாறு சந்தேகிக்க மாட்டீர்கள்” என்று பதிலளித்தார்கள்.

அதற்கு ஹவாரிய்யூன் “நிச்சயமாக இல்லை. நாங்கள் எங்கள் வயிறு நிறைய மட்டுமல்ல எங்கள் மனது நிறையவும் தான் அப்படியான உணவை வேண்டினோம்” என்று பதிலளித்தனர்.

அதற்கு ஈஸா (அலை) “உங்களுக்காக நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். ஆனால் சில நிபந்தனையின் பேரில்தான் அத்தகைய சொர்க்கத்து உணவு கிடைக்கும்” என்று சொன்னார்கள்.

“அது என்ன நிபந்தனைகளாக இருந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இந்த அதிசயத்திற்கு நாங்களே சாட்சியாக இருப்போம்” என்றும் உறுதியளித்தனர் ஹவாரிய்யூன் சீடர்கள்.

உடனே ஈஸா (அலை) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். “அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்களுக்கு உணவை இறக்குவாயாக. நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய். அது எங்களுக்கும், எங்களில் முன் சென்றவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும்” என்று வேண்டுகிறார்கள்.

அல்லாஹ்வும் ஈஸா (அலை) அவர்களின் பிரார்த்தனையை ஏற்கிறான். “உங்களுக்கு நீங்கள் கேட்டதை இறக்கி வைக்கிறேன். ஆனால் அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், இறைநம்பிக்கையில் இருந்து விலகினால், வாக்கு மாறியவர்களுக்குத் தக்க தண்டனையை அளிப்பேன்” என்று எச்சரித்து, உணவை சொர்க்கத்திலிருந்து அனுப்பினான்.

மீனும், அப்பமும், இதர கனி வகைகளும் வந்தன. இறைவன் அனுப்பிய உணவைக் கொண்டு நோன்பை நிறைவு செய்தார்கள்.

அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்.

திருக்குர்ஆன் 3:52, 5:111-115

Leave a Reply