ஆஸ்திரேலிய வீரர் ஹியூஸ் பவுன்ஸர் பந்து தலையில் தாக்கி மரணம் அடைந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்தே கிரிக்கெட் ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில் நேற்று பேட்ஸ்மேன் அடித்த பந்து ஒன்று பட்டு நடுவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஹியூஸ் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் பவுன்ஸர் பந்து தலையில் தாக்கி மரணம் அடைந்தார். அவருடைய உடல் வரும் புதன்கிழமை இறுதி மரியாதை செய்யவுள்ள நிலையில் மேலும் ஒரு கிரிக்கெட் மரணம் உலகையே உலுக்கியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் உள்ள அஸ்டோட் என்ற நகரில் தேசிய கிரிக்கெட் ‘லீக்’ போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியின் நடுவராகல் 55 வயதான ஹிலல் அவாஸ்கர் அவர்கள் பணியாற்றினார். ஆட்டத்தின் இடையே பேட்ஸ்மேன் ஒருவர் அடித்த பந்து ஒன்று நடுவரின் தாடையை தாக்கியது. இதனால் பலத்த காயத்துடன் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பலன் அளித்தும் சிலமணி நேரங்களில் அவர் மரணமடைந்ததாக மருத்துவமனை வட்டாரம் அறிவித்துள்ளது.
சர்வதேச நடுவராகவும், ஐரோப்பிய சாம்பியன் போட்டிகளின்நடுவராகவும் பணியாற்றிய அவாஸ்கர் இஸ்ரேல் அணியின் முன்னாள் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. அவாஸ்கரின் மரணத்துக்கு இஸ்ரேல் கிரிக்கெட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.