வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி–28 ராக்கெட்
ஐந்து வெளிநாட்டு செயற்கைகோள்களை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி. சி–28 ராக்கெட் வெற்றிகரமாக நேற்று இரவு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த வெற்றியால் இந்திய விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றூம் அதன் வணிக கிளையுமான ‘ஆண்டிரிக்ஸ்’ நிறுவனம் ஆகியவை இணைந்து ‘டிஎம்சி.3–1’, ‘டிஎம்சி.3–2’, ‘டிஎம்சி.3–3’ ஆகிய 3 செயற்கைகோள், அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த மைக்ரோ ‘சிபிஎன்டி–1’ என்ற துணை செயற்கைக்கோள் மற்றும் ‘டி–ஆர்பிட்செயில்’ என்ற நானோ செயற்கைக்கோள் ஆகிய 5 செயற்கைகோள்கள் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது.
நேற்றிரவு சரியாக 9.58 மணிக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து பெரும் சப்தத்துடன் தீப்பிழம்பை கக்கியபடி ஐந்து செயற்கைக்கோள்கள் அடங்கிய பி.எஸ்.எல்.வி. சி-28 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.
இந்த ராக்கெட் புறப்பட்ட 19 நிமிடம் 16 வினாடிகளில் பூமியில் இருந்து 654.75 கிலோ மீட்டர் உயரத்தை எட்டியது. திட்டமிட்ட அந்த உயரத்தை அடைந்ததும், செயற்கைகோள்கள் ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது. பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், மூன்றாவது மற்றும் நான்காவது நிலையில் பொருத்தபட்டு இருந்த என்ஜின் வெற்றிகரமாக இயங்கி செயற்கைகோளை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது.
ராக்கெட் வெற்றிகரமாக பறந்ததும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பி.எஸ்.எல்.வி. சி-28 ராக்கெட் சிறப்பாகச் செயல்பட்டு 5 செயற்கைக்கோள்களையும் துல்லியமாகச் செலுத்தியுள்ளது. இதன்மூலம், வணிக ரீதியில் “இஸ்ரோ’ செலுத்தியதிலேயே அதிக எடை கொண்ட இந்தத் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்று இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் அவர், இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.
இந்த வெற்றியின் மூலம் பி.எஸ்.எல்.வி ராக்கெட் இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் நம்பகமான ராக்கெட்டாக மாறியுள்ளது. இந்த வெற்றி பி.எஸ்.எல்.வி.யின் 29வது வெற்றி ஆகும். மேலும், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படும் ராக்கெட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பி.எஸ்.எல்.வி. சி-28 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்ட பின் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இந்த வெற்றியோடு வணிக ரீதியான செயற்கைக்கோள்களை எடுத்துச் சென்ற 5வது ராக்கெட் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் திட்டத்துக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது என்பதை வெளிப்படையாகக் கூற முடியாது. அது இஸ்ரோவின் வர்த்தகத் திறனை பாதிக்கும்.
வணிக ரீதியாக ராக்கெட்கள் செலுத்துவதன் மூலம் இஸ்ரோ தன்னிறைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இப்போது, ஆண்டுக்கு 4 முதல் 5 ராக்கெட்கள் அனுப்பப்படுகின்றன. விரைவில் இது ஆண்டுக்கு 10 ராக்கெட்கள் என அதிகரிக்க வேண்டும். அப்போது, வணிக ரீதியில் அதிகமான ராக்கெட்கள் ஏவப்படும். மேலும், அடுத்ததாக செவ்வாய் கிரகத்துக்கு அல்லது வேறு கிரகங்களுக்கு விண்கலங்களை அனுப்புவது குறித்து யு.ஆர்.ராவ் தலைமையிலான குழு முடிவு செய்யும். அதன்பின், அந்தத் திட்டப் பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு இஸ்ரோ தலைவர் கூறினார்.