பேரிடர்களை கண்காணிக்கும் 6 சிங்கப்பூர் செயற்கைகோள்கள் இன்று விண்ணில் பாய்கிறது
இஸ்ரோ நிறுவனத்தின் பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் 6 சிங்கப்பூர் செயற்கைகோள்கள் இன்று மாலை விண்ணில் ஏவ தயாராகவுள்ளது. பூமியின் தொலை உணர்வை அறிவதற்காக இந்த செயற்கைகோள்கள் பயன்படும்.
டெலஸ்-1, வெலக்ஸ்-சி1, வெலக்ஸ்-2, அதனாக்சாட்-1, கென்ட்ரிட்ஜ்-1, கிளாசியா ஆகிய 6 செயற்கைகோள்களை சிங்கப்பூர் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது. இந்த ஆறு செயற்கைகோள்களும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை (புதன்கிழமை) 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.
625 கிலோ எடை கொண்ட இந்த 6 செயற்கைகோள் 4 எரிபொருள் நிலைகளையும். 44.4 மீட்டர் உயரமும் கொண்டவை. பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட்டின் மொத்த எடை 227.6 டன். ராக்கெட்டை செலுத்துவதற்கான இறுதிகட்ட ஆயத்த பணி எனப்படும் 59 மணிநேர ‘கவுண்ட்டவுன்’, கடந்த 14-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கியது. தற்போது ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி உள்பட அனைத்துப்பணிகளும் முடிவடைந்து ராக்கெட் ஏவுவதற்கு தயார் நிலையில் உள்ளது.
பூமியின் தொலை உணர்வு, பேரிடர் கண்காணிப்பு, தகவல் தொடர்பு ஆகியவற்றிற்காக இந்த செயற்கைகோள்கள் செலுத்தப்படுகின்றன. வணிக ரீதியில் அனுப்பப்படும் இந்த செயற்கைகோள்கள் பூமியில் இருந்து 550 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும்
இவ்வாறு இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
English Summary: ISRO’s Polar Satellite Launch Vehicle to launch 6 Singapore satellites today