விண்வெளியில் கீரை விளைவித்து ‘நாசா’ சாதனை
பூமியில் கீரை விளைவித்து நாம் சாப்பிடுவது போல முதன்முதலாக விண்வெளியில் கீரை விளைவிக்க செய்து விண்வெளி வீரர்கள் சாப்பிட்டுள்ளனர். நாசாவும் புதிய முயற்சியால் இந்த சாதனை நடந்துள்ளதாகவும், இனி செவ்வாய் போன்ற வெகுதூர கிரகங்களுக்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கும் இதுபோல் கீரை உணவை அங்கேயே தயாரிக்கும் நடைமுறை விரைவில் வரும் என்றும் நாசா அறிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளி ஆய்வகம் ஒன்றை அமைத்து அதில் விண்வெளி வீரர்கள் சிலரை ஆராய்ச்சிக்காக பணியமர்த்தியுள்ளது. இந்த விண்வெளி வீரர்களுக்கான உணவுப்பொருள் விசேஷமாக தயாரிக்கபப்ட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் விண்வெளியில் பண்ணை அமைத்து அதில் கீரை வகைகள் பயிரிட திட்டமிடப்பட்டது. வெஜ்–01 என பெயரிடப்பட்ட சிவப்பு நிற கீரையை நாசாவும், ஆர்பிட்டல் தொழில் நுட்ப கழகமும் இணைந்து கடந்த ஜூலை 8ஆம் தேதி விண்வெளியில் அமைக்கப்பட்ட பிரத்யேக தோட்டத்தில் ஒட்டு முறையில் விதைத்தனர்.
அதற்காக கீரை விதைகள் 15 மாதங்கள் விண்வெளி நிலையத்திலேயே வைக்கப்பட்டன. விதைக்கப்பட்ட விதைகள் முளைத்து 33 நாட்கள் வளர்ந்தது. அதற்காக செடிகளுக்கு ‘சிரிஞ்ச்’ மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டது.
33 நாட்களுக்கு பிறகு இந்திய நேரப்படி நேற்று இரவு அந்த கீரை அறுவடை செய்யப்பட்டது. பூமிக்கு வெளியே விளைய வைக்கப்பட்ட அந்த கீரையை விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி முதல் ஆளாக வேக வைக்காமல் பச்சையாக ருசி பார்த்தார்.
விண்வெளியில் வெற்றிகரமாக கீரை விளைய வைத்ததற்கு ‘நாசா’ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விண்வெளியில் உணவு வகைகளை உற்பத்தி செய்வது உணவு தேவைக்காக மட்டுமின்றி விண்வெளி வீரர்களுக்கு மனரீதியாக உற்சாகம் அளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்தனர்.