தலையில் பந்து பட்டதால் எதிர்பாராதவிதமாக பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு சென்று, அதன் பின்னர் பரிதாபமாக பலியான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கு டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறுவதால் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிலிப் ஹியூஸின் மரணத்தினால் கிரிக்கெட் உலகம் துக்கத்தில் இருப்பதால், டிசம்பர் 4-ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குவதாக இருந்த முதல் டெஸ்ட் போட்டி தள்ளிவைக்கப்படுகிறது. பிலிப் ஹியூஸின் சொந்த ஊரான மேக்ஸ்வில்லேவில் அவர் படித்த பள்ளியில் அவருடைய இறுதிச்சடங்கு டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது. அதனால் அடுத்த நாள் தொடங்குகிற டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர்கள் கலந்துகொள்வது சாத்தியமில்லை.
பிசிசிஐ மற்றும் இந்திய அணியினர் எங்களுடைய நிலைமையைப் புரிந்துகொண்டு மிகுந்த ஆதரவு அளித்து வருகிறார்கள். முதல் டெஸ்டை தள்ளிவைப்பது குறித்து, ஆஸ்திரேலிய வீரர்கள், பிசிசிஐ அதிகாரிகள் என பல தரப்பினருடனும் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டது.
பிரிஸ்பேன் டெஸ்டுக்கு டிக்கெட் வாங்கியவர்கள் தாங்கள் வாங்கிய டிக்கெட்டை போட்டி தொடர்பான மறு அறிவிப்பு வரும் வரை பத்திரப்படுத்தி வைக்க ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.