40 கிலோ தங்கம், ரூ.18 கோடி ரொக்கம். ஜெகத்ரட்சகன் வீட்டில் பிடிபட்டது.
திமுக பிரமுகரும், முன்னாள் மத்திய அமைச்சரும், கல்வி நிறுவனங்களின் உரிமையாளருமான ஜெகத்ரட்சகன் வீட்டில் கடந்த சில நாட்களாக வருமானவரித்துறையினர்கள் சோதனை செய்து வந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத 40 கிலோ தங்கம் மற்றும் 18 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வருமான ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததை அடுத்து சென்னை அடையாறு, நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடுகள், தி.நகர் அலுவலகம், அவருக்கு சொந்தமான மதுபான ஆலைகள், மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 40 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.18 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் 40 கிலோ தங்கம் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெகத்ரட்சகன் ரூ.430 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் வருமான வரித்துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஜெகத்ரட்சகன் கடந்த 2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் அரசில் செய்தி தொலை தொடர்புத்துறையின் இணை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், ”சட்டத்துக்கு புறம்பாக கடந்த 3 நாட்களாக ஜெகத்ரட்சகளை வீட்டிற்குள் அடைத்து வைத்து சிறைக்கைதி போல நடத்துகின்றனர். வருமானவரித்துறையினர் சோதனை நடத்துவது தவறு இல்லை. அதே வேளையில் அவரது அன்றாடப் பணிகளை முடக்கும் வகையில் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்திருப்பது நியாயம் இல்லை. வருமானவரித்துறையின் இந்த செயலுக்கு அரசியல் பின்புலம் இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது” என கூறியுள்ளார்.