விண்ணில் இருந்து எரிகல் விழுந்ததால் உலகிலேயே முதன்முதலாக தமிழகத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் பலியானதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த மரணம் எரிகல் விழுந்ததால் ஏற்பட்டது அல்ல என நாசா கருத்து தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பிப்ரவரி 6ஆம் தேதி மர்ம பொருள் ஒன்று விழுந்து வெடித்து சிதறியதில் கல்லூரி பஸ் டிரைவர் காமராஜ் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் மேலும் 3 பேர் காயமடைந்தனர். அந்த பொருள் விழுந்த இடத்தில் 6 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே, வானத்திலிருந்து விழுந்த பொருள் விண்கல்லாக இருக்கலாம் என கூறப்பட்டது.
இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் கியூ பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கல்லூரியில் விழுந்து வெடித்த மர்ம பொருள் வெடிகுண்டு வகையை சேர்ந்தது இல்லை என்பதை உறுதிப்படுத்தினர். எனவே, விண்கல் தாக்கி உயிரிழந்த முதல் மனிதர் இவராகத்தான் இருக்க வேண்டும் என்ற தகவலும் உலகம் முழுவதும் பரபரப்பாக வெளியானது. சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கற்கள் விண்கற்கள்தானா? என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இணைய தளங்களில் வெளியாகி இருக்கும் படங்களைப் பார்க்கும்போது அது விண்ணில் இருந்து விழுந்த விண்கல் என்பதை விட நிலப்பகுதியில் ஏற்பட்ட ஏதோ ஒரு வெடிப்பு சம்பவமாகத்தான் இருக்க முடியும் என்று நாசா தெரிவித்து உள்ளது. இதுகுறித்து நாசாவின் கோளரங்க பாதுகாப்பு அதிகாரி லிண்ட்லி ஜான்சன் கூறியபோது, ‘‘சம்பவ இடத்தில் கைப்பற்றிய பொருள் சில கிராம்கள் அளவிற்கே எடை கொண்டதாக காணப்படுகிறது. இது பூமியின் பாறை படிமத்தின் சிறிய துண்டுபோல காட்சியளிக்கிறது. மேலும், இதுவரை உலகில் விண்கல் தாக்கி யாரும் இறந்ததாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை’’ என்று கூறியுள்ளார்
Chennai Today News: It’s official: It wasn’t a meteorite that killed the man from Tamil Nadu’s Vellore, says Nasa