14 கோடி பேர் பட்டினியால் வாடும்போது யோகா தேவையா? லாலு பிரசாத் யாதவ் கேள்வி

laluநேற்று புதுடில்லியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் தலைமையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சி கின்னஸ் சாதனை ஏற்படுத்தியுள்ளது. இந்த யோகா தினத்தை இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் வாழும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அனுசரித்து வந்தனர். இந்நிலையில் பீகார் முன்னாள் முதல்வரும்,  ராஷ்டிரீய ஜனதாதள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவி, காலி வயிற்றுடன் தூங்கும் ஏழைகளுக்கு யோகா தேவையா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து லாலு பிரசாத் யாதவ் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: யோகா போன்ற தனிப்பட்ட விஷயங்களை தனது சொந்த சாதனைகளாக மோடி அரசு விளம்பரப்படுத்தி வருகிறது. யோகாவை உடல் ஆரோக்கியத்துக்கான ஒன்றாக இல்லாமல், அரசியல் ரீதியாக பா.ஜ.க.வினர் பிரசாரம் செய்து வருவதை நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் அறிவார்கள். இந்தியாவில் 14 கோடி பேர் காலி வயிற்றுடன் தூங்க செல்வதாக உலக வங்கி அறிக்கை கூறுகிறது. அப்படியிருக்க இந்த நாட்டு ஏழைகளுக்கு யோகா தேவையா?

தங்கள் வயல்களில் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கு யோகா செய்ய நேரமில்லை. ரிக்‌ஷா ஓட்டுனர்கள், ஏழைகள், பின்தங்கியவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகளுக்கு யோகா தேவையில்லை. மாறாக பா.ஜ.க.வின் தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுக்கே உடற்பயிற்சி தேவை. தினமும் யோகா பயிற்சி மேற்கொள்பவர்கள் வெவ்வேறு உடல் அமைப்பில் உள்ளனர். அப்படியிருக்க இந்த பாசாங்குத்தனத்துக்கு என்று ஒரு நாள் தேவையா?

நான் யோகாவுக்கு எதிரானவன் அல்ல. ஆனால், இதன் மூலம் மக்களை ஏமாற்றுபவர்களுக்கு நான் எதிரானவன். நிதின் கட்காரி யோகா மூலம் தனது உடற்தகுதியை மேம்படுத்தியிருந்தால், அவர் ஏன் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்?” என்று கூறியுள்ளார்.

லாலு பிரசாத் அவர்களின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், ” ”சுமார் 200 நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோகாவை லாலு பிரசாத் யாதவும் பழிக்கின்றார். இதற்காக பீகார் மக்கள் சட்டமன்ற தேர்தலில் தக்க பாடத்தை புகட்டுவார்கள். அதன் பிறகாவது அவர் யோகா செய்வார் என்று நினைக்கின்றேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply