இயற்கைப் பேரழிவுகளைத் தடுக்கும் அன்னாபிஷேகம்!

LRG_20151016164015347479

பொதுவாக அபிஷேகம் என்பது தெய்வசிலாரூபங்களிலுள்ள அழுக்குகளைப் போக்குவதற்காகக் கூறப்படவில்லை. அபிஷேகத்தால் தெய்வத் திருமேனியில் பிரபஞ்ச அருட்சக்திகள் வேகமாகத் தோயும். அதன்மூலம் தெய்வச்சிலையிலும் அதனடியிலுள்ள யந்திரத்திலும் இறைசக்தியானது வியாபித்து நிற்கும் அதன் காரணமாகவே அபிஷேகத்திற்கான பலவகை திரவியங்கள் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன. அதேசமயம், அபிஷேகப் பொருளுக்குரிய எட்டுவித சமஸ்காரங்களைச் செய்யாமலும், அவற்றில் மந்திர உருவேற்றாமலும், அபிஷேகத்தின்போது சொல்ல வேண்டிய மந்திரங்களை ஓதாமலும் கடனே என்று செய்யும் அபிஷேகத்தினால் பயனிராது. ஆகவே கோயில்களில் அபிஷேகம் செய்விக்கும் அன்பர்களும் அதிகாரிகளும் முறைப்படி திருமஞ்சனம் செய்யுமாறு அர்ச்சகரிடம் வற்புறுத்தவேண்டும். அவர்களுக்கு உதவியாக தகுதியுடையவர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்குத் தக்க வெகுமதியும் அளிக்க முன்வரவேண்டும்.

விதிப்படி அபிஷேகம் நடைபெறுமாயின். இறை பிம்பத்திலும் யந்திரத்திலும் சேமிக்கப்பட்டுள்ள தெய்வீக சக்தி வசீகர அருள்பிரகாசத்தைக் கொடுக்கும் அடியார்களுக்கு அருள்செய்வது பிம்ப சக்தியும் யந்திர சக்தியுமே என்பதை நாம் உணர வேண்டும். பால், தயிர், தேன், இளநீர் பஞ்சகவ்யம் என பலவகை அபிஷேக திரவியங்கள் உள்ளன. இவற்றின் சிறப்பை தேவார மூவரும் தம் பாடல்களில் குறித்துள்ளனர். அப்பர் சுவாமிகள் பஞ்சகவ்ய அபிஷேகத்தைக் குறிப்பிடும்போது.

பாவமும் பழிப் பற்றற வேண்டுவீர்
ஆவிலைஞ் சுகந் தாடுமவன் கழல்
மேவராய் மிகவும் மகிழ் துள்குமின்
கூவாளன் கலந் தருள் செய்யுமே

என்கிறார். நமது பாவங்களும் பழிகளும் பஞ்சமா பாதக் குற்றங்களும் நம்மைவிட்டு நீங்கிட ஆவிலஞ்சு (பஞ்சகவ்யம்) அபிஷேகம் செய்ய வேண்டுமென்கிறார். இது அவனுக்கு மிகவும் விருப்பமானது என்றும் குறிப்பிடுகிறார். பசுவின் பால், தயிர், நெய், எரு, நீர் ஆகியவையே பஞ்சகவ்யம் எனப்படும். இவற்றுடன் பசுவின் கோரோசனையும் சேர்த்து ஷடாங்க மந்திரங்களால் அபிஷேகிப்பர். இது ஷடகவ்யம் எனப்படும். (கன்று குடித்தபின்பு பசுவின் மடியை நீரால் கழுவாமல், கன்றின் எச்சத்துடனே பாலைக் கறக்க வேண்டும். இந்தப் பாலே சிவனுக்கு விருப்பமானதாகும்.) பாவத்தை அழிக்கவும், எல்லாவிதமான கெடுதல்களைப் போக்கிக் கொள்ளவும். சகல சாப தோஷங்களிலிருந்து விடுபடவும், ஆயுள் முடிவில் இறைவனின் திருவடி நிழலை அடையவும் பஞ்சகவ்ய அபிஷேகம் துணை நிற்கும்.

பல கொடிய நோய்கள் துன்புறுத்தும் காலத்திலும், பெரும்பயம் ஏற்படும்போதும், பீடைகாலத்திலும், மற்ற நாடுகளால் அச்சுறுத்தப்படும்போதும், கெட்ட சகுன அறிகுறிகள் தென்படும்போது, மகாமாரியின் கோபத்தால் வரும் அம்மை, வைசூரி, வறட்சி ஏற்படும்போது, திசைகள் தீப்பற்றி எரியும்போது, அமங்கலம், தொல்லை கலக்கம் ஏற்படும்போதும், மழையின்றி பஞ்சமேற்படும் காலங்களிலும் மாதப்பிறப்பு, கிரகணம் முதலான காலங்களிலும் மற்றும் சிறப்பு புண்ணிய காலங்களிலும் பஞ்சகவ்ய அபிஷேகம் செய்யவேண்டுமென பூர்வ காரணாகமம் குறிப்பிடுகிறது. தூய நீரால் செய்யப்படும் அபிஷேகம் மனசாந்தியைத் தரும் தைலாபிஷேகம் இன்பம் தரும். பஞ்சாமிர்தம் ஐஸ்வர்யத்தையும், வாழைப்பழ அபிஷேகம் பயிர் வளத்தையும், பலாப்பழம் உலக வசீகரத்தையும், மாம்பழம் சகல வெற்றிகளையும் மாதுளை கோப சாந்தியையும், கரும்புச்சாறு வருத்தம் போக்கியும், சாத்துக்குடி, நாரத்தம்பழ அபிஷேகம் அமைச்சர் பதவியையும் தரும். எலுமிச்சம் பழ அபிஷேகம் எமபயம் போக்கும். சர்க்கரை சத்ருக்களை அழிக்கும் இளநீர் அபிஷேகம் ராஜ்ஜியத்தைத் தரும், பசும்பால் அபிஷேகம் விரும்பிய பயனையும் அழகு, செல்வம் மகப்பேறு போன்றவற்றை தயிராபிஷேகமும் தேனாபிஷேகம் சிறந்த சங்கீத ஞானத்தையும் அறிவு ஆயுளை நெய்யபிஷேகமும், பன்னீர் அபிஷேகமானது திசைகளில் வெற்றியையும் தரும். இவ்வாறு மேலும் பல பொருட்களும் பயன்களும் சொல்லப்பட்டுள்ளன.

ஐப்பசி பவுர்ணமியில் மிகச்சிறப்பிக்கப்படுவது அன்னாபிஷேகமாகும் அன்னம் என்பது உயிர்சக்தியை உள்ளடக்கிய சிறந்த உணவாகும். அனைத்துயிர்களிடமும் ஜீவன் நிலைத்திருப்பது அன்னத்தால்தான் ஆகவே அன்னத்தால் செய்யப்படும் அபிஷேகமானது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருவதாகும். எனது மற்றொரு உருவமே அன்னம். அதுவே எனது சிறப்பு வடிவமுமாகும் அன்னாபிஷேகத்திற்கு மேலாக எதுவுமில்லை; எதுவும் இருக்கப்போவதுமில்லை அன்னபூஜையே மிகச்சிறந்ததாகும் எனவே அனைத்து வகை பெருமுயற்சிகளாலும் அன்னாபிஷேகத்தைச் செய்திட வேண்டும். என்று இறைவனே பூர்வ காரணாகமத்தில் அருளியுள்ளார். அன்னமும் அன்னத்தை உண்பவனுமான பிரம்மமும் நானே என்று வேதம் கூறுகிறது. மந்திரத்துடன் அன்னத்தை சமைத்து நிவேதனம் செய்வதும்; அபிஷேக அலங்கார பூஜையின் முடிவில் அன்னப் பெரும்படையல் அளித்தலும் அன்ன பூஜையாகும்.

சங்கினால் அபிஷேகம் செய்வது சிறப்பிக்கப்படுகிறது சங்கு என்பது நாதத்தை உடையதாகையால் ஜீவனுள்ள பாத்திரமாய் சிறப்பு பெறுகிறது. கடல், நதி, குளம் ஆகியவற்றுள் தோன்றும் சங்குகள் வரிசைப்படி தரத்தைப் பெறுகின்றன. தாமிரபரணி நதியில் தோன்றுவது உத்தம சங்கு கங்கையில் தோன்றுவது மத்திமம். நர்மதையில் தோன்றுவது கன்யச சங்கம் இடம்புரிச் சங்கை விட வலம்புரிச்சங்கு மேலானது இவற்றில் ஒருபடி நீர்பிடிக்கும் சங்கு உத்தம சங்காகும். இந்த சங்கின் அமைப்பால் ஆண்-பெண்- அலி என்று மூன்று வகைப்படுகிறது. அடிப்பகுதி பருத்திருந்தால் பெண் சங்கு முனைப்பகுதி பருத்திருந்தால் அலி சங்கு மத்திய பகுதி பெருத்திருப்பதே ஆண் சங்கு இதனை சூட்சும ஆகமம் விளக்கிறது.

சூரிய மண்டலம், சந்திர மண்டலம் அக்னி மண்டலம் ஆகிய மூன்று; பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகள்; ஏழு கடல்கள், அனைத்து நதிகள், அனைத்து புண்ணிய தீர்த்தங்கள் ஆகியவற்றின் அம்சங்கள் சங்கில் நித்யமாய் விளங்குகின்றன. சங்கிலிருக்கும் நீருக்கு மட்டுமே தீர்த்தம் என்று சிறப்புப் பெயர் உண்டு மற்ற பாத்திரங்களிலுள்ள நீர் வெறும் நீர்தான் எனவே விசேஷ அர்க்கியத்துக்கு சிறப்பு பூஜாபாத்திரமாக சங்கே விளங்குகிறது.

மூன்று தத்துவரூபமான முக்காலியின் மீது ஆதிகூர்மமான ஆமையின் முதுகில் அனந்த பத்மாசனத்தின்மீது சங்கை வைத்து அதில் நீர் நிறைத்துப் பூஜித்து பின்பு அந்த நீரை அபிஷேகத்துக்கும் பூஜைக்கும் பயன்படுத்தலாம். சங்கு இல்லாதபோது சங்கு வடிவ முத்திரையாவது காட்டப்பட வேண்டும். சங்கினால் அல்லது சங்கு வடிவ முத்திரையால் செய்யப்படுவதே சிறந்த அபிஷேகமாகும். பன்னிரு மாதங்களிலும் வரும் திருவாதிரை நாள், தேய்பிறையில் வருகிற சிவ திதியாகிய சதுர்தசி, அஷ்டமி திதி மற்றும் சிறப்பு பூஜைக் காலங்களில்; புதியதும் உருக்கியதுமான பசுநெய்யால் அபிஷேகம் செய்யவேண்டுமென சைவாகமங்கள் விதித்துள்ளன. (இதனுடன் கோஷ்ணோதகம் எனப்படும் இளஞ்சூடான நீராலும் அபிஷேகம் செய்ய வேண்டும்) அக்னியின் வடிவாய் விளங்கி நமக்கு நீண்ட ஆயுளைத் தருவது பசு நெய்யாகும் கல்பகோடி வருடங்களாக செய்து நாம் சேர்த்துவைத்துள்ள பாவங்களெல்லாம் முறையாக நாம் செய்யும் ஒரேயொரு நெய்யபிஷேகத்தால் அழிந்துவிடும் என்கிறது சிவாகமம். அபிஷேகத்தால் அழியும் பாவங்கள் பற்றி சிவதருமோத்ர ஆகமம் பின்வருமாறு கூறுகிறது.

தூய தண்ணீரால் செய்யப்படும் அபிஷகமானது பத்து பாவங்கள் வரை போக்கும் பாலாபிஷேகம் நூறுபாவங்களையும், தயிராபிஷேகம் ஆயிரம் குற்றங்களையும் தேனாபிஷேகம் பத்தாயிரம் அபராதங்களையும் போக்கும், பசுநெய் அபிஷேகம் ஒரு லட்சம் பாவங்கள் தீர்க்கும். மூன்று லட்சம் தோஷங்களை வெண்கரும்புச்சாறு அபிஷேகமும் கோடி பாவங்களை இளநீர் அபிஷேகமும் தீர்க்கும் எண்ணிலடங்கா பாவங்களை அரைத்த சந்தனக் குழம்பின் அபிஷேகம் அழித்துவிடும். இவ்வாறு அபிஷேக திரவியங்களும் முறைகளும் மிக விரிவாகவும் விளக்கமாகவும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளன.

அபிஷேக முடிவில் மெல்லிய பருத்தித் துணியால் ஆண்டவனின் திருமேனியைத் துடைத்து விட வேண்டும். பின்னர் சந்தனம், அகில், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனை, விளாமிச்சம் வேர் ஆகிய ஆறு பொருட்களையும் அரைத்து, அந்த சுகந்த பரிமள திரவியங்களை ஒன்று சேர்த்துக் குழைத்து பூசிவிட வேண்டும்.பின்னர் புதிய அல்லது துவைத்து உலர்த்திய ஆடையை சுவாமிக்கு அணிவிக்க வேண்டும். அபிஷேக காலம், நிவேதனம் செய்யும் காலம், ஆடை, சந்தனம், மலர்கள் சாற்றி அலங்காரம் செய்யும் காலம் ஆகியவை பூஜாகாலம் எனப்படும். இந்தக் காலங்களில் சன்னிதியைத் திரையிட்டு மறைக்கவேண்டியது அவசியம் ஏனெனில் பாவிகள் கடும் நோயாளிகள், கல்வி நிந்தை செய்வோர் சாஸ்திரங்களைப் பழிப்போர் போன்றோர் மேற்சொன்ன தெய்வ விசேஷங்களைக் கண்டால் பூஜை பயனற்றுப்போய்விடும். பிரச்சந்நபட காலே நகர்த்தவ்யம் லிங்க தர்சனம் பிரமாதாத் தர்சனம் கிருத்வா சாக்ஷயம் நரகம் விரஜேத் என்கிறது வீராகமம் அதாவது திரை போட்டிருக்கும் காலத்தில் தரிசனம் செய்யக்கூடாது அவ்வாறு தரிசித்தால் குறைவற்ற நரகம் கிட்டும் என்கிறது. எனவே திரைபோட்டிருக்கும் காலத்தில் எட்டிப் பார்ப்பது போன்ற காரியங்களை அவசியம் தவிர்க்க வேண்டும். திரை நீக்கிய பின் தரிசித்து பேரானந்தம் கொள்ளலாம்.

அபிஷேகம், அர்ச்சனை, தூபதீபம் ஹோமம் போன்றவற்றைச் செய்யும்போது அதற்கேற்றபடி மந்திரம் சொல்வர் அந்த மந்திர வாக்கியத்தின் முடிவில் ஏழு மந்திர பல்லவங்களை உரியபடி இணைத்துச் சொல்ல வேண்டும். சப்தகோடி மகாமந்திர பல்லவங்கள் எனப்படும் அந்த ஏழு மந்திரங்கள் நம; ஸ்வாஹா: ஸ்வதா: ஹும்; பட்; வஷட்; வௌஷட் அல்லது சுவௌஷட்; என்பவையாகும். உதாரணமாக தூபதீபம் காட்டும்பொழுதும் நிவேதனம் செய்யும்பொழுதும் ஹோமத்தில் ஆகுதி செய்கிற பொழுதும் சுவாஹா என்பதை மந்திரமுடிவில் உச்சரிப்பார்கள். அதுபோல அபிஷக காலத்தில் நம; என்பதை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு முறையான அபிஷேகங்கள் உலகமக்கள் அனைவருக்கும் நன்மை தரும்; தேசங்களையும் செழிப்புடையதாக்கும்.

Leave a Reply