சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு. 1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு மூதலீடுகள் வர வாய்ப்பு
சென்னையில் இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து ஆலோசனை செய்ய வருகை தந்துள்ளனர். முதல்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்குமேல் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தொழில்துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
ஆட்டோமொபைல், ஜவுளி, தோல் உற்பத்தி, காற்றாலை, சிறு, குறு, நடுத்தர தொழில்பிரிவுகளில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 19 லட்சத்து 65 ஆயிரத்து 20 திறன் வாய்ந்த தொழிலாளர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2000 முதல் 2011 வரை 11 ஆண்டுகளில் ரூ.33 ஆயிரத்து 105 கோடிக்கு அந்நிய முதலீடுகள் ஈர்க்கப் பட்டன. 2011 முதல் இதுவரை 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.60 ஆயிரத்து 620 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தொழில்துறை தெரிவித்துள்ளது.
அதில், 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.31 ஆயிரத்து 706 கோடிக்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. ஒப்பந்தம் செய்த 17 நிறுவனங்கள் கட்டுமானப் பணியை முடித்து உற்பத்தியை தொடங்கியுள்ளதாகவும் கூறப் படுகிறது.
இந்நிலையில், உலக அளவில் தமிழகத்தில் அதிகப்படியான முதலீடுகளை ஈர்க்கும் விதமாக தற்போது உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக அரசால் நடத்தப்படுகிறது. இதுவரை, முதலீட்டாளர்கள் தாங் களாக வந்து தமிழக அரசை நாடி, ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வந்தனர். தற்போது தமிழகத்தில் முதல்முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டின் மூலம் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகளை ஈர்ப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சென்னையில் இன்று தொடங்கும் இந்த மாநாட்டுக்காக ரூ.100 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கும் மாநாட்டில் தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டின் மூலம் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் துறை, மருந்து தயாரிப்பு மற்றும் உயிரி தொழில்நுட்பம், வேளாண் மற்றும் வேளாண் உற்பத்தி பொருட்கள், ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகங்கள், ஏரோஸ்பேஸ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உள் கட்டமைப்பு, ரசாயனம், பெட்ரோலியம் மற்றும் கனிமம் சார்ந்த தொழில்கள், கனரக பொறியியல், திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், மின்னணு வன்பொருள் உள்ளிட்ட தொழில் பிரிவுகளில் முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு நாடுகளில் முன்னோட்ட மாநாடு கள்,கண்காட்சிகள் தமிழக தொழில்துறை சார்பில் நடத்தப் பட்டன. தொழில் துறை மட்டுமின்றி ஜவுளி, சுற்றுலா மற்றும் சிறு, குறு தொழில்கள் துறை என பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கண்காட்சி, முன்னோட்ட மாநாடுகளை நடத்தினர்.
இவற்றின் பயனாக, தமிழகத் தில் மாவட்ட அளவில் பல்வேறு சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் முதலீடுகளை அதிகரிக்கவும், பல நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் புதிதாக தமிழகத்தில் முதலீடு செய்யவும் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் இலக்கைத் தாண்டி ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடுகள் பெறப்படும் என தமிழக தொழில்துறை வட்டாரங்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளன.