தலைமை செயலகத்தை முற்றுகையிட்ட 1500 ஜாக்டோஜியோ அமைப்பினர் கைது
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் இன்று சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றை அறிவித்திருந்தனர். இதனையடுத்து ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அமைப்பின் நிர்வாகிகளை போலீசார் கைது செய்திருந்த நிலையில், தலைமை செயலகத்தை சுற்றி சுமார் 2000 போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
தலைமைச்செயலகம் அருகே சாலையில் தடுப்புகளை வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வந்திறங்கிய அந்த அமைப்பினர் 1000 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சென்னையில் எல்லையில் வேன் மற்றும் பேருந்துகளில் வரும் ஜாக்டோஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.