உளவுப்பிரிவு டிஜிபி ஜாபர்சேட் இடைநீக்க உத்தரவு ரத்து. பெரும் பரபரப்பு
அரசியல் கருத்துக்களை பெரும் பரபரப்புடன் தன்னுடைய ‘பிளாக்கில்’ பதிவு செய்து வருபவர் சவுக்கு சங்கர் என்பவர். இவர் கடந்த 2006-2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் என்பவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, திருவான்மியூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உயர்நிலை வீட்டுமனை பெற்றதாக புகார் கூறினார்.
இவருடைய புகாரின் அடிப்படையில் தமிழக அரசு ஜாபர் சேட்டை கடந்த 2011ஆம் ஆண்டு இடைநீக்கம் செய்தது. இந்த இடைநீக்க உத்தரவை எதிர்த்து சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ஜாபர் சேட் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தீர்ப்பாய நீதிபதி ஆறுமுகச்சாமி, நிர்வாக உறுப்பினர் ஆர். ராமானுஜம் ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணை வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த இவர்கள் டிஜிபி ஜாபர்சேட்டை பணியிடைநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுமாறும், மீண்டும் பணி வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
திமுக ஆதரவாளர் என கூறப்படும் ஜாபர்சேட் குறித்த உத்தரவு தேர்தல் நேரத்தில் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.