சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் பதவி விலகிய நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய தலைவராக ஜக்மோகன் டால்மியா (74) ஒருமனதாக நேற்று தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிசிசிஐ உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலும் நேற்றே நடைபெற்றது.
ஐபிஎல் முறைகேடு வழக்கில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீனிவாசன் பிசிசிஐ தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடக் கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவு இட்டதை தொடரந்து அவர் போட்டியிடவில்லை. இதனால், அவரது ஆதரவாளரான ஜக்மோகன் டால்மியா களமிறங்கியுள்ளார்.
இந்தத் தேர்தலில் போட்டியிட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் முடிவு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பின்னர் அவர் போட்டியிடவில்லை என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று நடைபெற்ற தேர்தலில் ஜக்மோகன் டால்மியா போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
பிசிசிஐ செயலாளராக என்.சீனிவாசன் அணியின் எதிரணியைச் சேர்ந்த அனுராக் தாக்கூர் ஒரேஒரு வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.
தற்போது மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக உள்ள ஜக்மோகன் டால்மியா ஏற்கெனவே 2001-2004ஆம் ஆண்டுகளில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியை வகித்தவர். 1997 முதல் 2000 வரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் இருந்துள்ளார்.